மீண்டும் தொடங்கியிருக்கும் கூரையற்ற பள்ளிக் கூடம்

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பூநகரி மகா வித்தியாலயம் கூரையற்ற பாடசாலையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருககிறது. யுத்தம் பல்வேறு வகையில் தாக்கியிருக்கும் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளில் ஒன்றான கிளி பூநகரி மகா வித்தியாலயம் இன்று ஆதரவுக்கரங்களை நாடி நிற்கிறது

பூநகரி மகா வித்தியாலயம் பூநகரிப்பிரதேசத்தில் ஒரு முதன்மையான பாடசாலையாக இயங்கி வந்தமைக்கு சான்றாக அழிந்து போன சிதைவடைந்த கட்டிடங்கள் சாட்சியாக நிற்கின்றன. பூநகரிப் பிரதேச மக்கள் கடந்த காலத்தில் எந்தளவு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அந்தளவு செழிப்பாக பாடசாலை விளங்கியிருக்கிறது. பிரமாண்டமான முறையில் அமைந்திருந்த பாடசாலையின் பிரதான மேல் மாடிக் கட்டிடம் இப்பொழுது கூரையற்றுப் போயிருக்கிறது. அதிபரின் அலுவலகம் மற்றும் சில வகுப்பறைகள் அந்த கூரையில்லாத கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

ஆரம்பப்பிரிவு மாணவர்கள் ஒரு வகுப்பறையில் குழுமி படித்துக் கொண்டிருந்தார்கள். போதிய இடமில்லாமல் நெருங்கியிருக்கும் அந்த வகுப்பறை யுத்த அழிவில் இருந்து தப்பியிருக்கிறது. அந்த வகுப்பறையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த கலீஸ்வரி இரவீந்திரன் என்ற ஆசியர் ஆரம்ப பிரிவு மாணவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து ஆரம்பப்பரிவு மாணவர்களின் வகுப்பறை நிலவரங்கள் தொடர்பாக பேசினார்.

“வகுப்பறை என்பது இப்பொழுது மரம்தான். அதற்கு கீழே இருந்துதான் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பப் பிரிவில் பத்துப் பிரிவுகள் இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் வகுப்பறைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓவ்வொரு பிரிவுகளிலும் அறுபது பிள்ளைகள்வீதம் மொத்தமாக 300 மாணவர்கள் படிக்கிறார்கள். பின்னேர வெயிலுக்குள்ளும் இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். காலையில் பத்து மணிவரையும்தான் கல்வி கற்க முடிகிறது. ஆசிரியர்கள் தூர இடங்களில் இருந்து பேரூந்துகளில் வருவதால் காலை பத்து மணிக்கு மேல்தான் வர முடியும். அதன் பின்னர் வந்து கல்வி கற்பிக்கும் சூழலும் இல்லாமல் போகின்றது”

இப்படி கலீஸ்வரி குறிப்பிடும் இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் பூநகரி பரந்தன் போக்குவரத்து பேரூந்தில் உள்ள நெருக்கடி நிலவரத்தை பார்த்தேன். ஒழுங்கான பேரூந்துகள் இல்லை. உக்கிப் பழுதடைந்து போயிருந்தன. பேரூந்தில் நிற்க முடியாதளவு நெருக்கடி. இவற்றில் பயணம் செய்து பெரும் சிரமங்களை அவர்கள் எதிர் கொள்வதைப் பார்த்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள் தங்களுக்கும் விடுதி வசதிகள் செய்து தந்தால் தங்கியிருந்து கல்வி கற்கலாம் என்று குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் கலீஸ்வரி மாணவர்களது நிலவரங்கள் பற்றி என்னிடம் குறிப்பிட்டார்.

“மாணவர்கள் பல்வேறு துயரங்களுக்குள்ளால் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். முன்பு வகுப்பறையில் இருந்ததைப்போல இப்பொழுது இல்லை. படிப்பில் கவனம் இல்லாமலும் போய்விட்டது. பரீட்சைக்குக்கூட நிறைய மாணவர்கள் வரவில்லை. பேற்றோர்களிடமும் மாணவர்களது கல்வி பற்றிப் பேச முடியாத நிலைதான் உள்ளது. அவர்கள் இருக்கும் நிலையில் இந்தப் பிள்ளைகளின் கல்வி பற்றி எப்படி பேச முடியும்? அவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியை இழப்புக்களின் அழுத்தத்தால் கவனிக்கவில்லை. நாங்கள் கலந்துரையாடல்களுக்கு அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை. பிள்ளைகளின் பெறுபேறுகளை கொடுப்பதற்கு அழைத்தாலும் வருவதில்லை”

பாதிக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு என்ன தேவை? எப்படி கற்பிக்க வேண்டும்? அதற்கு விசேட திட்டங்கள் எதாவது உள்ளனவா? என்பதை முக்கியமான விடயங்களாக தெரிகின்றன. பூநகரிப் பிரதேச மாணவர்கள் குறிப்hக சிறார்கள்மீது இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் போல உணருகின்றேன். இது குறித்து கலீஸ்வரி இப்படி குறிப்பிடுகிறார்.

“ஆம். போரினால் தாய் தந்தையரை இழந்த பல குழந்தைகளை இனங்கண்டு விசேடமாக கவனித்து வருகிறோம். ஓவ்வொரு பிள்ளைகளுடனும் பேசி அவர்களின் மனநிலைகளை அறிந்து வருகிறோம். போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலையில் இது அவசியம் செய்ய வேண்டிய பணியாக உள்ளது. முன்பு நிறைய விளையாட்டுப் பொருட்கள் கற்பித்தல் உபகரணங்கள் என்பன இருந்தன. இப்பொழுது ஒன்றுமில்லை. கதிரையும் மேசையும் மட்டும் இருக்கின்றது”

கூரைக் கதவுகள் ஜன்னல்கள் இல்லாமல் இருக்கும் வகுப்பறைகளை விட மரமே வகுப்பறையாகிப்போய் பல வகுப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கூரகைளை இழந்து சிதைந்து உருக்குலைந்து காயங்களுடன் பழமையான கட்டிடங்கள் வாசகங்கள் தெரிகின்றன. ஆரம்பப்பரிவு மாணவர்கள் பலர் மரத்தின் கீழாகத்தான் படிக்கிறார்கள். வெயிலும் காற்றும் புழுதியும் அவர்களை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறது. செல்வரத்தினம் கீர்த்திகா என்ற மாணவி இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சையை எழுத இருக்கிறார். பழைய நிலையை எட்ட வேண்டும் என்ற ஆர்வம் அந்த மாணவர்களிடம் இருப்பதற்கு இவர் சிறந்த உதாரணம் என நினைக்கிறேன்.

“நான் கடந்தவருடம் சாதாரணதரப் பரீட்சையை எழுத வேண்டியிருந்தது. ஆனால் ஒரு வருடம் பிந்திய நிலையில் தற்பொழுது பரீட்சையை எழுத இருக்கிறேன். அப்பா முன்பு கமத் தொழிலில்தான் ஈடுபட்டார். தற்பொழுது அந்தத் தொழிலை செய்யும் சூழல் எங்களுக்கு இல்லை. ஆனால் பழைய நிலையை அடைவதற்காக நாங்கள் கடுமையாக முயற்சித்து வருகிறோம்”

தன் தந்தை பற்றி அதிகம் என்னோடு பேசிய இந்த மாணவி யுத்தத்தில் தன் தந்தையை இழந்திருக்கிறார். இந்தப்பாடசாலையில் யுத்தம் காரணமாக பல மாணவர்கள் தங்கள் உறவுகளை இழந்திருக்கிறார்கள்.

“இந்தப் போர் எனது அப்பாவை பலியெடுத்து விட்டது. அதுவே எங்களது குடும்பத்தில் பெரும் கஷ்டத்தை கொண்டு வந்தது. நான் இப்பொழுது மாமா வீட்டில்தான் இருந்து படிக்கிறேன். அப்பாதான் என்னை பாடசாலைக்கு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வருவார். எங்களை மிகவும் அன்போடு பார்த்து வந்தவர். அப்பா எங்களுக்காக வயல்களுக்கள்தான் எந்த நேரமும் நிற்பார்”

சிதைவடைந்த சிறிய சிற்றுண்டிச்சாலையில் சிதைவடைந்த ஜன்னலால் மாணவர்கள் சிற்றுண்டி பெற்றுக் கொண்டிருந்தார்கள். பாடசாலையின் அரங்கம், தண்ணீர் தாங்கிகள் என்று எல்லாமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. நிவாரணத்திட்டத்தில் கொடுக்கப்ட்ட மஞ்சள் கதிரைகளும் புத்தக பைகளும்தான் இவை வகுப்பறை என்பதை காட்டுகின்றன. தொடர்ந்து கூரையற்ற கட்டிடத்தின் கீழாக அலுவலகத்தில் வேலைகளுடன் இருக்கும் அதிபர் இராமலிங்கம் பாலச்சந்திரனுடன் பேசினேன்.

“2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து போன எமது பாடசாலை 2009.04.01 அன்று மீண்டும் மீள்குடியேறி இயங்கிக் கொண்டிருக்கிறது. யுத்தம் காரணமாக இந்தப் படசாலையின் அனைத்து வளங்களையும் நாங்கள் இழந்திருக்கிறோம். கட்டிடடங்கள் எல்லாம் கூரைகளற்ற நிலையிலும் இடிந்த நிலையிலும் காணப்படுகின்றன. பாடசாலையில் எந்த வசதிகளும் இல்லை. வேலி இல்லை. குடிநீர் இல்லை. ஆசிரியர் தங்குவதற்கான வசதிகள் இல்லை. மாணவர்களுக்கு வகுப்பறைகள் இல்லை. ஆனாலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். மிகவும் நெருக்கடியான நிலையில்தான் இந்தப் பாடசாலையை நாங்கள் நடாத்திக் கொண்டிருக்கிறோம்”

2006இல் யுத்தம் மூண்ட பொழுது இந்தப்பாடசாலை ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் தற்காலிக கொட்டகைகளில் இயங்கிக் கொண்டிருந்த பொழுது இந்தப் பாடசாலைக்குச் சென்றிருந்தேன். யுனிசெப் நிறுவனத்தின் தரப்பால்களாலான அந்த வகுப்பறைகள் மணாலாலான தரை மேலே பாலை மரங்கள் என்பன எனக்கு ஞாபகத்திற்கு வந்தன. 2006 இற்கு முன்பாகவும் இந்தப் பாடசாலை கடுமையான யுத்த சவால்களை, இடப்பெயர்வுகளை அவலங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. செழிமையாக இருந்த இந்தப் பிரதேச மக்களின் வீழ்ச்சியும் இந்தப் பாடசாலையை பாதித்தாக தொடர்ந்து அதிபர் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

“யுத்தம் கடுமையாக வதைத்த எங்கள் மாணவர்கள் மீண்டும் கல்வியில் சிறந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆசிரியர்களும் அயராது உழைத்து வருகிறார்கள். தற்போதைய பெரு விளையாட்டில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்று மகாண மட்டப் போட்டிகளுக்கு செல்லும் நிலையில் உள்ளது. எல்லா சொத்துக்களையும் இழந்து மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் வளங்களை இழந்து வீடற்று பெற்றேர்hகளை இழந்து உறவினர்களை இழந்து இந்த இக்கட்டான நிலையில் ஏதோ ஒரு துன்பத்துடன் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்

பாடசாலை என்று இங்கு வந்து கல்வி கற்பதற்கான எந்தச் சூழ்நிலையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். யுத்தத்தின் வடுக்களுக்குள் அகப்பட்டு இருக்கிற இன்றைய நிலையில் இந்தப் பாடசாலையை எப்படியாவது நகர்த்திச் செல்ல வேண்டும் என்று கருதுகிறோம். இந்தப்பாடசாலையை நடத்திச் செல்ல அனைத்து தரப்பினரும் உதவிகளை நல்க வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்றன இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவை நாங்கள் எதிர் பார்க்கிறோம”

வகுப்பறைகள் இல்லாமல் கரும்பலகைகள் இல்லாமல் சுவர்களில் எழுதிப் படிக்கும் வகுப்புக்களையும் பார்க்க நேரிட்டது. இப்பொழுது பாடசாலையை பழைய நிலமைக்கு கொண்டு செல்ல அவசியமான உதவிகள் அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன. இந்தப் பாடசாலை குறித்து பழைய மாணவர்கள் அதிக அக்கரை காட்ட வேண்டும் என்று அதிபர் பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

“புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளிடம் நான் சில உதவிகளை எதிர் பார்க்கிறேன். இந்தப் பாடசாலைக்கு அவசியமாக நீர் வழங்கல் சேவை ஒன்றை வடிவமைக்க வேண்டியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை செய்ய வேண்டியுள்ளது. இங்கு படிக்கின்ற பெற்றேர்hகளை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவிகளைச் செய்வதன் வாயிலாக அவர்களின் உயர் படிப்புக்களுக்கு உதவ வேண்டும். பாடசாலை கட்டடிடங்கள் சுற் று வேலிக ள் என்பன புனரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இவற்றை எங்கள் உறவுகள் செய்து தர வேண்டும் என்பதை விநயமாக எதிர்பார்க்கிறேன். பாரிய யுத்தம் ஒன்றினால் நிர்கதி நிலையில் உள்ள இந்தப் பாடசாலையை மேம்படுத்தி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை இனிதாக்க உதவிகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

பூநகரிப் பகிரதேசத்தைப் பொறுத்த வரை நாங்கள் முதன்மையான பாடசாலை. ஆனால் நகர்ப் புறத்தலிருந்து மிக அதிகமான தொலைவில் இருக்கிறது. போக்குவரத்து நெருக்கடிகள் முக்கியமாக ஆசிரியர்களின் வருகையை பாதிக்கின்றன. மாணவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று மேலதிக கல்வியைக் கற்பதற்கோ வேறு பயிற்சிகளை பெற்றுக் கொள்வதறகோ வளங்களை பெறுவதற்கோ இயலாத நிலையில் உள்ளார்கள். ஆனால் பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை நடாத்தி பரீட்சையில் மாணவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறோம். ஆசிரியர்கள் தங்கி நிற்பதற்கு தங்குமிட வசதி குடிநீர் வசதி வசதி என்பன இல்லாதிருக்கின்றன. எங்களுக்கு சில வளங்கள் கிடைக்குமாக இருந்தால் நல்ல முறையிலே மீண்டும் அதே நிலைக்கு செல்ல முடியும் என்பதை உறுதியாக நாங்கள் நம்புகிறோம்”

பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி செழிப்பான வாழ்க்கைக்கு அடிகோலிய இந்தப் பாடசாலை தனது பிரமாண்டத்தை இழந்து செழிப்பை இழந்து கூரையற்றுப் போயிருக்கிறது. விரிந்த வானமும் வெயிலும் காற்றும் வகுப்பறையாகிப் போயிருக்கும் இந்தப் பிள்ளைகளின் கல்வி இன்று மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறது. பொறுப்பான அக்கரையின் வாயிலாக யுத்தம் தாக்கிய பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தி சிதைந்திருக்கும் எங்கள் சமூகத்தை உயிரூட்ட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. சில வளங்கள் இருக்குமானால் பழைய நிலைமைக்கு செல்லுவோம் என்ற அதிபரின் உறுதியான வார்த்தைகள் உதவிகளை ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.