பரிஸ் நகரை அண்மிக்கும் சிவந்தனின் 10வது நான் மனிதநேய நடை பயணம்

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மேற்கொள்ளும் 10வது நாள் மனிதநேய நடை பயணம் பரிஸ் நகரை அண்மித்துள்ளது.

பரிஸ் நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், சற்று முன்னர் வில்லியேஸ் நகரை சென்றடைந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் ஒள்றுகூடி அவரை வரவேற்றதுடன், உள்ளுர் பத்திரிகையாளர்களும் சிவந்தனைச் சந்தித்திருந்தனர்.

தற்பொழுது செவ்றோன் நோக்கி நடந்து செல்லும் சிவந்தன் செவ்றோனை சென்றடைந்ததும், இன்று பிற்பகல் 3:00 மணியளவில் முள்ளிவாய்க்கால் மக்களிற்காக செவ்றோன் நகரசபையால் மரநடுகை செய்யப்பட்ட நினைவிடத்தில் இடம்பெறும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து லாக்கூர்னோவ் என்ற இடத்தில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு மரநடுகை செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 6:00 மணியளவில் மற்றொரு மக்கள் ஒன்றுகூடலும், சிவந்தனுக்கான வரவேற்பு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பிரான்ஸ் நகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து நாளை பரிஸ் நகரில் இருந்து சிவந்தன் தனது ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணத்தைத் தொடர இருக்கின்றார்.

சிவந்தனுடன் பொஸ்கோ என்ற இளைஞனும் கலைஸ்சில் இருந்து தொடர்ச்சியாக பரிஸ் நோக்கி நடந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.