பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ள சிவந்தன் : செவ்றோனில் மக்கள் ஒன்றுகூடல் இடம்பெற்றது

பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ள சிவந்தன் : செவ்றோனில் மக்கள் ஒன்றுகூடல் இடம்பெற்றது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று பிற்பகல் பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ளார்.

லண்டனில் இருந்து டோவர்வரை 100 கிலோமீற்றர்கள்வரை நடந்து சென்ற சிவந்தன், பின்னர் பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பரிஸ் நகர்வரை 296 கிலோ மீற்றர்கள் நடந்து சென்றுள்ளார்.

மேலும் 60 கிலோமீற்றர்கள் நடக்கவுள்ள சிவந்தனின் நடை பயணம் மீண்டும் நாளை தொடரவுள்ளது.

இன்று பிற்பகல் செவ்றோனைச் சென்றடைந்த சிவந்தனும், அவருடன் இணைந்து சென்றவர்களும் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியிலும், மரம் நடுகை செய்யப்பட்ட இடத்திலும் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் அப்பிரதேசத்தின் நகரசபைத் தலைவரும், உப தலைவரும் கலந்துகொண்டதுடன், தமிழ் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரங்கள் சில கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

நாளை காலை செவ்றோனில் இருந்து லாக்கூர்னோவ் செல்லும் சிவந்தன், அங்கும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதுடன், பின்னர் அங்கிருந்து ஒபவில்லியே ஊடாக லாச்சப்பல் மாநகரசபை முன்றலைச் சென்றடைந்து அங்கும் ஒரு மணிநேர ஒன்றுகூடல் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.