லாக்கூர்னோவ், ஒபவில்லியே, பரிஸ் நகரசபைகள் ஊடாக சிவந்தனின் மனிதநேய நடை பயணம்

லண்டனில் இருந்து 400 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரம் நடந்து பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ள சிவந்தன், இன்று 11வது நாளில் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, பரிஸ் நகரசபைகள் ஊடாக தனது நடை பயணத்தை தொடருகின்றார்.

நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார்.

இன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ் நோக்கி நடந்து செல்வதுடன், பின்னர் அங்கிருந்து ஒபவில்லியே செல்லவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2:30 மணியளவில் பரிஸ் நகரசபையை அவர் சென்றடைந்ததும் அங்கு நகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பும், மாபெரும் மக்கள் ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து சுமார் 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் நடந்து செல்ல இருக்கின்றார்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.