நண்பரின் வீட்டில் தங்கிய பெண் 5 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மாயம்

நீண்டகாலத்திற்கு முற்பட்ட தனது நண்பர் ஒருவரின் வீட்டில் வந்து தங்கிய பெண்ணொருவர் அங்கிருந்து ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் மானிப்பாய் அரசடி வீதியிலுள்ள நண்பரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்தவர் அன்று நள்ளிரவு அந்த வீட்டிலிருந்து நகைகளை திருடிக் கொண்டு வெளியேறியுள்ளார்.

குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் சென்ற போது அங்கிருந்த இளைஞர்களிடம் தனது குழந்தைக்கு சுகயீனமாக உள்ளதால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அதனை அடுத்து அந்த இளைஞர்களும் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் இந்தப் பெண்ணை காணவில்லையென குறித்த வீட்டார் தேடிய போதே தமது நகைகள் காணாமல் போன விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் தமது தங்க நகைகள் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று வைத்தியசாலையின் பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மைக் காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் திருட்டுச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன. வெளிநோயாளர் பிரிவுகள், மற்றும் விடுதிகளிலேயே இந்தத் திருட்டுக்கள் இடம்பெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.