வடக்கு,கிழக்கு பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறுவதை எவராலும் தடுக்கமுடியாது: சம்பிக்க

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் குடியமர்த்தப்படவில்லை. முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தற்போது மீண்டும் அந்த பகுதிகளில் மீளக்குடியேறுவதை எவராலும் எந்தக் கட்சியினராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. பொய் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கில் 1981 ஆம் ஆண்டு 12 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது அந்த மக்கள் இடங்களில் குடியேற முடியும். அதனை எவராலும் எந்தக் கட்சியினாலும் தடுக்க முடியாது.

பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்கள் ஆயுத விநியோக மார்க்கம் காணப்பட்ட இடங்களில் இருந்த பகுதிகளிலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலமே பயங்கரவாதத்தின் எச்சங்களை அழிக்க முடியும்.

இதற்கு பாதுகாப்பு வலைப்பின்னல் அவசியம். அதனை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் இது தொடர்பில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவடைகின்றது. அதனை நீடிப்பதற்காகவே அவர் மேற்கத்தேய நாடுகளை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆசிய நாட்டில் இருந்து தெரிவான அவர் மேற்கத்தேய நாடுகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.