உலகிலேயே பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு நடத்தப்பட்ட முதல் உண்ணாவிரதம்: சரத் பொன்சேகா சாடல்

ஐ.நா. விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆனால், பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு சேலைன் போத்தலுடன் அரசாங்க அனுசரணையில் இங்கு மட்டுமே உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. சேறும் பூசிக்கொள்ளப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உண்ணாவிரதம் முதலைக்கு நெத்தலி சவால் விடுத்த கதையாகும். இதன்மூலம் முகத்தில் சேறுபூசிக் கொள்ளப்பட்டது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பல்கலைக்கழக மாணவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சகலருக்கும் தெரியும். ஆனால், பொலிஸாருக்கு மட்டுமே இது தெரியாமற் போனது எவ்வாறு? சட்டத்தரணி வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மலைநாட்டு பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சட்டம் எங்கே இருக்கின்றது.

அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தியதால் 10 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. வாகன போக்குவரத்துக்கு 6 மில்லியனும், போக்குவரத்துக்கு 2 மில்லியனும், சாப்பாட்டுக்கு 2 மில்லியனும் செலவிடப்பட்டது. இதில் பிரயோசனம் இருக்கின்றதா?

அத்துடன் 20 இலட்சம் ரூபா செலவில் பெந்தோட்டையில் அமைச்சர்கள் ஆட்டம் போடுகின்றனர். இவையெல்லாம் யாருடைய பணம், நாட்டை கட்டி யெழுப்பு வதற்கு நிதியில்லாத நிலையில் இவையெல்லாம் தேவையா?

ஜி.எஸ்.பி. பிளஸ் இல்லாமல் போனமை தொடர்பில் உண்மையை தெளிவுபடுத்த அமைச்சர்கள் தயார் எனினும் அமைச்சு பதவிகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.

களத்தில் போராடி யுத்தத்தை வெற்றி கொண்ட தளபதி நான் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து கொண்டு அதனைக் செய்யவில்லை. இவற்றிற்கு நானே பொறுப்பு என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.