கடந்த மாதம் மாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 765 பேர்கைது

கடந்த மாதம் மாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 765 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். அவர் அவசர கால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவ்வாறு கூறினார்.

அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-

”பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 723 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் 74 பேர்.

கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் புலிகள் இயக்கத்துக்கு சொந்தமாக உள்ள வீடுகள்,வியாபார நிலையங்கள், காணிகள், ஏனைய சொத்துக்கள் போன்றவற்றை அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 30 வருட கால பயங்கரவாதத்துக்கு முடிவு காணப்பட்டு நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிரந்தர சுதந்திரமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சில சட்ட நிலைமைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

கைதான புலி உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த மக்கள், புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி புலிகள் மறைத்து வைத்திருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

இது தவிர இந்தத் தகவல்களின் அடிப்படையில் புலி உறுப்பினர்களை அடையாளங் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு உதவி வழங்கிய கனேடிய அரச சார்பற்ற நிறுவனமொன்றை அந்த நாடு தடை செய்துள்ளது.

புலிகளுக்கு உதவிய நபர் ஒருவருக்கு தென் இந்தியாவில் ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாம் பெற்ற சுதந்திரத்தை நிரந்த சமாதானமாக மாற்றுவதற்கு அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டியுள்ளது.

சிலர் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால் எமது நாட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டியது சகல எம். பி.க்களின் பொறுப்புமாகும்.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.