பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம்

லண்டனில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர்கள் நடந்து பரிஸ் நகரை அடைந்திருந்த சிவந்தன், பரிஸ் நகரில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா நோக்கி இன்று பிற்பகல் 4:00 மணியளவில் புறப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவந்தன் இன்று 11வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார்.

இன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, லா சாப்பல், பரிஸ் நகரசபை போன்ற இடங்களிற்கு நடந்து சென்றனர்.

இதன்போது லாக்கூர்னோவ் பகுதியில் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வனுக்கு மர நடுகை செய்யப்பட்டுள்ள இடத்திலும், ஒப்வில்லியே பகுதியிலுள்ள லெப்ரினன்ட் கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது துயிலும் இல்லத்திலும் வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று பிற்பகல் பரிஸ் நகரசபையில் இடம்பெற்ற நகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பு, மற்றும் மக்கள் ஒன்றுகூடலைத் தொடர்ந்து சிவந்தன் ஜெனீவா நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார்.

பரிஸ் நகரசபை முன்றலில நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் பொதுமக்கள் 150 பேர் வரையில் கலந்துகொண்டதுடன், இவ்வாறு கலந்துகொண்டவர்களில் 70 முதல் 80 பேர் இன்று மாலைவரை சிவந்தனுடன் இணைந்து நடந்து சென்றனர்.

இந்த நிகழ்வில் இளையோர்களே அதிகளவில் கலந்துகொண்டுள்ள அதேவேளை, றொயிற்றர்ஸ் செய்திச்சேவை சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றிய தகவல்கள் நேரில் சென்று படம் பிடித்துள்ளது.

தமிழ் மக்கள் சார்பில் சிவந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பிரெஞ்சு மக்களிற்கு வழங்கப்பட்டதுடன், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட குறிப்பிட்டளவு பிரெஞ்சு மக்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.