சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது

தமிழ் மக்களிற்கு நிதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

இன்று காலை முதல் நண்பகல்வரை 20 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் 15 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

Bonneuil-sur-marne என்ற இடத்தில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் அவர், Sucy-ne-brie என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்.

பரிஸ் நகரில் இருந்து சிவந்தனையும், அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்த மக்கள், உலர் உணவுப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.

எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.