இலங்கை அகதிகளை தாங்கிய கப்பல் கனடாவின் வன்குவார் கரையைச் சென்றடையும்

இலங்கை அகதிகளை தாங்கிய கப்பல் இந்த மாத நடுப்பகுதியில் கனடாவின் வன்குவார் கரையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த இலங்கை புகழிடக் குடியேறிகளை ஏற்றிய கப்பல் தொடர்பில் அமெரிக்காவும், கனடாவும்; கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாபளபிள்ளை தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் பயணிகளின் உடல் நிலைமை குறித்து கவலையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய கப்பல் ஒன்றில் 200 அகதிகள் பயணிப்பதாகவும், இந்தக் கப்பல் நீண்ட பயணங்களுக்கு பொருத்தமற்றதென அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாத நடுப்பகுதியில் குறித்த கப்பல் வான்குவார் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய கரையை கப்பல் ஒன்று அண்மித்துள்ளதாக தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அதிகாரி அறிவித்துள்ளார்.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த கப்பலில் பயணிப்பதாகவும் இதில் அநேகர் இலங்கைத் தமிழர்கள் எனவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாரின் பாரின் 19 ‐ தாய்லாந்து கப்பலை கஸ்ரோவின் உதவியாளர் (வினோ) கந்தசாமி கமலராஜ்; வழிநடத்தி வருவதாக திவயின கூறுகிறது:‐

200 விடுதலைப் புலி உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படும் ஹாரின் பாரின் 19 என்ற தாய்லாந்து கப்பல் அமெரிக்கா ‐ கனடா இடையிலான சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்று (04) கண்டறிந்துள்ளனர். தாய்லாந்து கொடியுடன் பயணிக்கும் இந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது.

வானொலி தொலைத்தொடர்புகளை நிராகரித்து பயணித்துவரும் இந்தக் கப்பல் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டுவந்த கஸ்ரோ என்பவரின் உதவியாளரான வினோ என்ற கந்தசாமி கமலராஜ் என்பவர் வழிநடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

ஆயுதக் கடத்தல்காரரான வினோவைக் கைதுசெய்வதற்கு உதவுமாறு சர்வதேசக் காவல்துறை கனேடிய இரகசிய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 14ம் திகதி கனடாவைச் சென்றடையும் எனவும் தெரியவருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.