சிக்கல் ஸ்ரீலங்காவின் சூழ்ச்சி அரசியலை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் சரிபார்க்கவேண்டும்

ஸ்ரீலங்காவின் இனவாத அரசுத்தலைவரும், அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பாசிச நாசித்துவத்தின் ஊற்றுவாயாக 1950. 1952 ம் ஆண்டுகளிலேயே டி.எஸ் செனநாயக்கவினால் உருவாகி இனங்காணப்பட்ட, ஐக்கியதேசியக்கட்சியின் இன்றய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சிப்பகைமறந்து மாற்று அரசியல் கருத்துமறந்து சிங்களவர்கள் என்கின்ற ஒற்றுமையுடன் ஒருமுகத்தோடு மாதம் ஓரிருமுறை சந்தித்து பேசிக்கொள்வதை ஒருமரபுசார்ந்த நடைமுறையாக வைத்திருக்கின்றனர்.

கட்சி பிறழ்வுகாரணமாக ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடமிருந்து ஒருவர்பறித்துவிட வேண்டுமென்ற போட்டி உள்ளூர அவர்களுக்குள் இருந்தாலும். அவற்றையும் தாண்டி தமிழர்களை அழிப்பதில், தமிழர்களின் ஒற்றுமையைஉடைத்து சின்னாபின்னம் ஆக்கிவிடவேண்டுமென்பதில், இருவருக்கும் கடுகளவும் வேறுபட்ட கருத்தை காணமுடியவில்லை,

2002 ல். யுத்தநிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உடன்பாட்டிற்குவந்தகையோடு ரணில் விக்கிரமசிங்க கையிலெடுத்த நடவடிக்கை, பறந்தடிப்பில்லாத எந்தச்சலசலப்புக்கும் இடங்கொடுக்காமல் தமிழரை உடைத்துப்பிரிக்கும் சூழ்ச்சி, அவற்றை நியாயப்படுத்துவதற்காக உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் சென்று தனது திட்டத்தை தெரிவித்து நியாயப்படுத்தி அனுமதிபெற்றுக்கொண்ட கபடமான இராசதந்திரம்,

ஸ்ரீலங்காவில் ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரமுள்ள சிங்களத்தலைவர்களில் ஒருவர் படுமோசமான பாசிசநோக்குடன், நஞ்சுமருந்தை சிறிஞ்சுகள் மூலம்ஏற்றி தமிழ்சமூகத்தை கொன்றழிப்பதற்கான திட்டத்தில் வெற்றிபெறத்துடிதார், மற்றவர் அதே நச்சுப்பாசாணங்களை பீரங்கிகள்மூலம் பாய்ச்சி உடனடியாக தமிழர்களை அழித்து ருத்திரதாண்டவம் ஆடிமுடித்திருக்கிறார். இருவரது நோக்கங்களும் ஒன்றே, தியறிகள் மட்டும் மாறுபட்டிருக்கின்றன,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள அரசியல்க்கட்சி எதுவாக இருந்தாலும் தேர்தலில்போட்டியிட்டு வெல்வதற்கு சிங்களபொதுமக்களின் முன்வைக்கும் ஒப்புதல் வாக்குமூலம், தமிழருக்கான உரிமைகளை இல்லாமல்ச்செய்வோம், தரப்படுத்தலை இன்னும் அதிகரிப்போம் தமிழரை நாடற்றவர்களாக்குவோம், இன்னும் பிறவாக்குறுதிகளை சத்தியப்பிரமாணமாக சமர்ப்பிப்பதுதான் வழக்கம்,

நகைச்சுவை என்னவென்றால் பின்னணியில் அதை வழிமொழிந்தாற்போல தொடர்ச்சியாக பலதமிழ் அரசியல் அறிவுக்கொளுந்துகள் காலாகாலத்திற்கும் மாறிமாறி செக்கிழுத்துக்கொண்டிருக்கும் கொடுமை நிறுத்தப்படவில்லை,

ஒரேயொரு ஆட்சிக்காலத்தில் மட்டுமாகிலும் தமிழ் எட்டப்பர்களின் ஆராத்தியெடுப்பு நிறுத்தப்பட்டிருக்குமானால், சிங்களம் சிந்திப்பதற்கு ஒருசந்தற்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கும், துரதிஸ்ட்டவசமாக அந்த ஊற்றுவாய் அடைக்கமுடியாமல் தொடர்ந்து ஊறிக்கொண்டே இருக்கிறது,

ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் தமிழ்பேசும் இனங்களான தமிழரும், தமிழை தாய்மொழியாகக்கொண்டிருக்கும் முஸ்லீம்களும், ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழுவதை சிங்களத்தலைமைகள் என்றைக்கும் அனுமதித்ததில்லை, விரும்பவில்லை.

முஸ்லீம்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளைத்தெரிவுசெய்த சிங்கள அரசியல் சூழ்ச்சியாளர்கள், சிறுபான்மையான முஸ்லீம்தலைமைகளை வயிறுதடவி. தமதுவிசுவாசிகள் போல தோற்றப்படுத்தி .ஆகவேண்டிய சலுகைகளாக மந்திரிப்பதவிகளை கொடுத்து, முஸ்லீம்களுக்கான சிலசிறிய அபிவிருத்திகளை பெருத்த அபிவிருத்திபோன்ற தோற்றத்தை உண்டுபண்ணி, சிங்களவர்களை தமிழர்பிரதேசங்களில் குடியமர்த்தும் சதியின் ஆரம்பம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் மத்தியில் தொடங்கிவைக்கப்பட்டது,

மிகதந்திரமாக அடிமட்ட வறுமைப்பட்ட சிங்களவர்களை, முஸ்லீம் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்குள் புகுத்தி, முஸ்லீம்களுக்கு சேவகஞ்செய்வது போன்றமாயையை தோற்றுவித்த சிங்களம். மெல்ல அவர்களை அங்கேயே குடியமர்த்தும் சூழ்ச்சியின் ஆரம்பமாக சற்றுத்தொலைவிலுள்ள காடுகளை அதே சிங்களவர்கள் வெட்டி தானியங்கள் பயிரிட்டு குடியிருக்கவும் திட்டமிட்டு ஊக்குவித்து, பின்நாட்களில் பெருத்த சிங்களகுடியேற்றங்களை விஸ்த்தரித்த இடங்களாக முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் மாறிப்போயிருப்பதை காணமுடியும்.

எங்கு முஸ்லீம்கள் வாழுகின்றார்களோ, அங்கு சிங்களமும் பரவியிருப்பதை இன்றுகாணலாம், கிழக்குமாகாணம்,அம்பாறை மற்றும் புத்தளம்பகுதி, திருகோணமலை நகரத்தையொட்டிய முஸ்லீம் கிராமங்கள், இன்று சிங்களநாடாக மாற்றம்பெற்றிருக்கின்றன.

நாளடைவில் எந்த எதிர்ப்புமில்லாமல் சிங்களக்குடியேற்றங்கள் பெருகியதை, தமிழர், மற்றும் முஸ்லீம்மக்கள், பலர்மறந்தேவிட்டனர், அது சிங்களநாடுதானே என்றுசொல்லுமளவுக்கு இன்றுபரந்து சிங்களக்குடியிருப்புக்கள் விரிந்திருக்கிறது,

மலையகத்து தமிழ் அரசியல்க்கட்சிகளை சிங்களவர் ஒருபொருட்டாகவே ஒருபோதும் எடுத்துக்கொண்டதில்லை. அப்படிநடந்துகொள்வதற்கு பிரித்தானிய ராய்ச்சியமே மூல முதல்க்காரணமாகும்,

மலையக அரசியல் கட்சிகளின் தலைமைகளுடன் மதிக்காமல் நடந்துகொள்ளும் அதே வைத்தியத்தையே இந்திய, தமிழ்நாட்டு, அரசியல்வாதிகளிடம் அறிமுகப்படுத்துமளவு சிங்கள அரசியல்வாதிகள் விவேகமாக துணிந்து செயற்படக்கூடிய வெளியுறவுக்கொள்கைகளைக்கூட கடைப்பிடித்திருக்கின்றனர்,

இந்திய வெளியுறவுக்கொள்கையில் இறுக்கம் காணப்படும் இன்றய அரசியற்சூழலில்க்கூட, சர்வசாதாரணமாக இந்தியாவை மிரட்டிப்பணியவைக்கும் தந்திரங்களை சிங்கள அரசு சாதாரணமாக எந்தப்பதட்டமுமில்லாமல் காய்நகர்த்தக்கூடிய தைரியத்துடன் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது,

ஒருபுறம் இந்தியாவை தனது நெருங்கிய நண்பனாகக்காட்டிக்கொண்டு, மறுபுறம் இந்தியாவின் பிரதான எதிரிகளான பாக்கிஸ்தான், சீனா, மற்றும் வளமிக்க வலிமையான ரஷ்யா ஈரான் போன்றவற்றை தனது மிகப்பெரும் நட்புநாடுகளாக்கி, இந்தியாவால் சிக்கெடுக்கமுடியாத ஒரு இராசதந்திரச்சிக்கலை இந்தியாவுக்குள் எறிந்துவிட்டு, நமட்டுச்சிரிப்புடன் ஸ்ரீலங்காசெய்யும் அரசியலை எவராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை, இது இந்தியாவுக்கு நல்லஒரு படிப்பாக அமையும், அமையவேண்டும்,

பிரித்தாளும் தத்துவத்தை பிரித்தானியா என்றாலும்சரி, அமெரிக்காவென்றாலும்சரி, இலங்கையில் ராஜபக்க்ஷவிடம் கற்றுக்கொள்ளவேண்டிய கட்டத்தில் அரசியல் ஆளுமைபெற்ற ஆசிரியராக ராஜபக்க்ஷ உலகநாடுகளில் அறிமுகமாகியிரக்கிறார்,

உலகத்தின் தலைவிதியை ஓரளவேனும் மாற்றி எழுதக்கூடிய வல்லமைகொண்ட மாமன்றமான, ஐநா மன்றம்கூட, ராஜபக்க்ஷவின் உலுப்பலுக்குள் சிக்குண்டு தெற்காசியவட்டகைக்கான தனது கொழும்பு அலுவலகத்தை மூடி, தனது அலுவலர்களை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு கடுகதி விமானத்தில் திருப்பியழைத்த வரலாற்றுப்படிப்பும் ஐநாவுக்குண்டு,

இந்த நிலையில் ஸ்ரீலங்காவுக்கு மிகுந்தநெருக்கடியை கொடுக்கக்கூடியதாக கருதப்படுவது, விடுதலைப்புலிகள் இயக்கம், புலிகளின் சர்வதேசவலையமைப்பு, அதையும்தாண்டி யார் விடுதலைப்புலிகள் என அறியமுடியாத அளவுக்கு புலம்பெயர் தேசங்களில் புலிகளுடன் ஒன்றிவிட்ட மக்கள்எழுச்சி, வீதிகளிலும் சட்ட நியாயமன்றங்களிலும், அரச அரசசார்பற்ற நிறுவனங்களுடனான இடைவிடாத தொடர்பாடல், இவைகள் இலங்கை அரசாங்கத்தை பூதாகரமான மிரட்சிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது,

விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டதென்று பல்வேறு ஆதாரங்களுடன் பரப்புரைசெய்தும். (புலிகளியக்கம் எந்தச்சேதாரமுமில்லாமல் அப்படியே அழிவில்லாமல்) தொடர்செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் நடந்துகொண்டிருப்பதும், சிங்கள அரசுக்கெதிராக உலகத்தை திருப்பி குற்றவாளிக்கூண்டின் சட்டப்பிடிக்குள் ஸ்ரீலங்கா அரசை நகர்த்தமுயலும் முனைப்பும், புலம்பெயர்ந்த சமூகத்தால் உருவாகியிருக்கும் புதிய அரசியல் ஸ்தாபனங்களும், சிக்கலாக மாறாத்தலையிடியாக சிங்கள அரசுக்கு சவாலாகி நிற்கிறது,

இவற்றை இல்லதொழிப்பதற்கு இயன்றளவு தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசு பின்பற்றி, அழிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுவிட்டதையும் காணலாம்,

நேரடியாக எதையும் செய்துவிடமுடியாதென்பதை உணர்ந்து. தந்திரம், சதி, பொறிவைத்து வீழ்த்தும் விஷமம், ஆகிய நரித்தனமான நடைமுறையை கையாளவேண்டிய கட்டதில். எதைக்குடித்தால் பித்தம் தெளியுமோ அதைக்குடிக்கும் நிலைஇலங்கை அரசுக்கு இருக்கிறது,

இதற்கான திட்டங்களை தனக்கிசைவான ஒவ்வொருகிளைகள் மூலமாக ஒவ்வொருபக்கத்திலும் நடந்துகொண்டுதானிருக்கிறது,

இந்திய அரசியல்வாதிகள் மூலம் வருங்காலங்களில் சோனியாவின் மகன் ராகுல்கான், மற்றும் சிங்கள அதிபர் ராஜபக்க்ஷவின் மகன் நாமல், இருவரும் ஈழத்தில் சந்திப்பதற்கான திட்டமும் திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,,

மறுபக்கத்தில் ஈழத்தமிழருக்கான நியாயத்தின் குரலாக தமிழ்நாட்டிலிருந்து வீரியமாக எழும்பிய சீமானின் குரலை கருணாநிதியின் ஆதரவுடன் ஒடுக்க சினிமாவுக்குள் பிரிவினையை தோற்றுவித்து, சீமானை தனிமைப்படுத்தல் சீமான் போன்ற அதேகுணங்கொண்டவர்களை ஆள்த்தூக்கிச்சட்டங்களை தாறுமாறாக தமிழ்நாட்டில் உலவவிட்டு அடக்கும் அனீதியும் நடைமுறைக்கு வந்துவிட்டது,

பல சந்தற்பங்களில் உயிரை துச்சமென மதித்து தேசியத்தலைவரின் கொள்கைகளை பின்பற்றி, தமிழர்கள் மத்தியில் விசுவாசமான அரசியல் நடத்தி சோரம்போகாத கொள்கைகொண்ட சகோதரர் மனோ கணேசனின், மேலக மக்கள் முன்னணியின் உறுப்பினரான பிரபா கணேசனை பிரித்த சதியும் தமிழர்களை உடைக்கும் திட்டத்திலொன்றாகவே காணமுடியும்,

அதேபாணியில் ஈழத்திலிருக்கும் எதிலிகளிடத்திலும், சிறைவாசிகளிடத்திலும், தடைமுகாம்வாசிகளிடத்தும், தமிழர் தேசியக்கூட்டமைப்பை அணுகவிடாமல் அன்னியப்படுத்துதல், பொதுநிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் இப்போ புதிதாகக்கண்டுபிடிக்கப்பட்ட கே பி யை, முன்னிலைப்படுத்தும் தந்திரத்தையும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர், சமீபத்தில் சில போராளிகளை குடும்பத்துடன் இணைக்கும் நிகழ்வொன்றில் கே.பி. முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்,

ஸ்ரீலங்காவின் மிகமோசமான குற்றவாளியாக சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டுவந்த குற்றவாளி ஒருவர், எந்த உள்நாட்டுச்சட்ட நீதி நடவடிக்கைக்கும் முகம் கொடுக்காமல், அவரே ஸ்ரீலங்காவின் நீதி பரிபாலனத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு சாதாரணமாக சந்தேகத்தில் பிடிபட்டவர்களை விடுதலை செய்யுமளவுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றால் ஸ்ரீலங்காவின் அரசித்தலைவரின் தந்திரம் சூழ்ச்சி எந்தளவுக்கு நீள்கிறதென்பதை ஸ்ரீலங்காவின் அதிகாரத்திற்கப்பாற்பட்டு வாழுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்

தமது வரலாற்றுகொடுமையை மறைப்பதற்கு தாம் தப்பிப்பதற்கும் தொடர் தவறுகளை ஸ்ரீலங்கா அரசு செய்துவருகிறது.

மக்களின் மீழ் குடியேற்றதாமதத்திற்கு நாட்டின் அபிவிருத்தி முன்னெடுப்பு தாமதப்படுத்துவதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது, எனது காணியில் நான்போய் குடியிருப்பதற்கும் அபிவிருத்திக்கும் என்ன சம்பந்தமென்றுதெரியவில்லை, ஒருதனிமனிதன் தனது சொந்த இடத்தில் சுதந்திரமாக குடியேறிவாழ்வதுதான் அபிவிருத்தியின் முதற்கட்டம், மனிதவாழ்வை புறந்தள்ளி உலகம் புரியாத சிதம்பரசக்கர அரசியல் அந்தாதி பாடி, அதற்கான பரப்புரைக்கு பொருள் தேடிக்கொண்டிருக்கிறது ஸ்ரீலங்கா சமஸ்த்தானம்,

கந்தசாமியும், செல்லத்துரையும், கணபதிப்பிள்ளையும், நாகலிங்கமும், குடியிருந்த இடத்தில் அப்புகாமிக்கும், அனுராவுக்கும், புத்தகோவில் கட்டுவதுதான் அபிவிருத்தியென்று சிங்கள அகராதி கூறியிருக்கிறதா, ஏதோநோய்க்கு எதோமருந்து தேடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு, இப்பேற்ப்பட்ட மருந்துகள் வேறு பக்கவிளைவை உண்டுபண்ணி தீரா நோய்க்கான அறிகுறியாகவே மாறும் அபாயம் உண்டாகும்,

நீண்டகாலமாக புரையோடிப்பொயிருக்கும் இலங்கைக்குள் உண்டாகியிருக்கும் சிக்கலை தீர்க்கவேண்டுமென ஒரு அரசியல் தலைவர் மனப்பூர்வமாக விரும்பினால் சூழ்ச்சி தந்திரம் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, வெளிப்படையாக தமிழர் சமூகத்தை அணுகுவதே ஆரோக்கியமாக இருக்கும், தவிர்த்து காலத்துக்கொருவரை மேடையேற்றி சூழ்ச்சியின் மூலம் தந்திரத்தின் மூலம் வெல்லமுடியுமென நம்பினால், அவர் தோல்விக்குள் ஏதோ தேடுகிறார் என்பதை சமூகம் புரிந்துகொள்ளுவதற்கு நீண்டகாலம் தேவையில்லை,

இன்றய சிக்கல் ஸ்ரீலங்காவின் சூழ்ச்சி அரசியலை, புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் சரியாகப்புரிந்துகொண்டு, கடந்தகால படிப்பினைகளை அடியொற்றி,

60 ஆண்டுகால தமிழர்வாழ்வில் எது சரியென தேசியத்தலைவரால் நன்கு இனங்காணப்பட்டு நிறுவப்பட்டு ஒன்றுபட்டு நிற்கிறார்களோ, அங்கு உபரிகளாக நுழைக்கப்படும் ஒரு துரும்பையும் கவனித்து, கருத்தறிந்து இனங்காணவேண்டிய மிகப்பெரும் பொறுப்பான கட்டாயத்திலிருக்கின்றனர் ,மீண்டும் உரசிப்பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது,

கனகதரன்,

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.