சிவந்தனிடம் ஒரு கோரிக்கை – ஈழமுரசு ஆசிரிய தலைப்பு

ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இன்னும் அரைவாசித் தூரத்தைக் கடக்கவேண்டிய இளைஞனின் மனதிலும், கால்களிலும் சோர்வினைக் காண முடியவில்லை. நெஞ்சில் உறுதி மட்டும் அசைக்கமுடியாத அளவிற்கு இருப்பதை உணரமுடிகின்றது. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே இந்த இளைஞனின் ஒரே குறிக்கோளாக இருக்கின்றது.

அந்த இளைஞனின் கரம்பற்றி மேலும் பல தமிழர்கள் நடந்துகொண்டிருப்பது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வையோ அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நீதியையோ கைவிட்டு, மறைத்து அந்த மக்களுக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மட்டுமே வழங்கவேண்டும் என்ற ரீதியில் சிறீலங்கா தனது அனைத்துக் காய்களையும் திட்டமிட்டு நகர்த்தி வருகின்றது.

இதற்கு சிறீலங்காவுடன் ஒட்டிஉறவாடும் தமிழ் ஒட்டுக்குழுக்களும், புதிதாக உருவாகியுள்ள ஒட்டுக்குழுக்களும் வழியேற்படுத்திக்கொடுக்க முண்டியடிக்கின்றனர். தமிழ் மக்களுக்கான நீதியை மறுத்து, அவர்களின் இழப்புக்களை மறைத்து, அவர்களின் நிலங்களை முழுமையாக விளுங்கி ஏப்பம்விடத் தயாராகிவிட்ட சிங்களத்தின் கொடூர செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் கையாளாகாத நிலையில் தமிழ்க் கட்சிகளும், தமிழ் குழுக்களும் இருக்கின்றன.

இந்நிலையில்தான், அந்த மக்களுக்கு சர்வதேசத்திடம் இருந்து நீதியைப்பெற்றுவிட தன் உடலை வருத்தி இந்த நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டிருக்கின்றார். சிவந்தனின் இந்தப் பயணம் அணைந்து போய்க்கொண்டிருந்த தமிழ் மக்களின் மனங்களில் மீண்டும் தீயைப் பற்றவைத்திருக்கின்றது. தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்தத் தீ அணைந்துவிடக் கூடாது என்பதுதான் இப்போது எல்லோரது விருப்பமாகவும் இருக்கின்றது.

தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு மட்டும் இருக்கவில்லை. இந்த இன அழிவுக்கும், சிறீலங்காவின் இன அழிப்புக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைநின்ற இன்னும் நிற்கின்றவர்களிடமும் தமிழ் மக்கள் தங்கள் நீதியைப் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

எனவே, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன் இந்த நெடும் பயணம் முடிந்துவிடக்கூடாது. இது இன்னும் தொடரவேண்டும். ஒரு மரதன் ஓட்டம்போல் இல்லாமல், ஒரு அஞ்சலோட்டமாக இதனைச் மாற்றவேண்டும். இதனை மாற்றும் வல்லமை இந்த முதலடியை எடுத்து வைத்துள்ள சிவந்தனுக்கு உரியது.

சிவந்தன் கையில் இருக்கும் நீதிக்கான கோரிக்கையை இன்னொருவரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் அதனை எடுத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் மீது தடை விதித்தன் மூலம் சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு ஒரு வகையில் உற்சாகத்தை வழங்கி உதவி புரிந்த பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கி நீதி கேட்டு நடக்கவேண்டும்.

அங்கிருந்து இத்தனை அவலங்களுக்குப் பின்னரும் தமிழினத்தின் விடுதலைக்காக உழைத்துக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ள, போர்க் குற்றவாளியை தங்கள் நாட்டின் தூதுவராக அங்கீகரித்த ஜேர்மனிய நாடாளுமன்றத்திடமும், அங்கிருந்து நெதர்லாந்து நாடாளுமன்றம் நோக்கியும் நீதி கேட்டுச் செல்லவேண்டும்.

கடந்த அறுபது வருடங்களாகத் தொடரும் இந்த இன அழிவுக்கும் தமிழ் மக்கள் இன்று தமது தாயகத்தை முழுமையாக இழந்து போகும் நிலைக்கும் காரணமாகிவிட்ட இலங்கைத் தீவிலிருந்த இரு நாடுகளை தங்கள் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைத்து ஆட்சி புரிந்துவிட்டு, அந்நாட்டைவிட்டு வெளியேறிய போது, ஒரே நாடாக்கி ஒரு இனத்தின் கையில் ஆட்சி ஒப்படைத்துவிட்டு வந்த பிரித்தானிய முடியாட்சியிடம் நீதி கேட்டுச் செல்லவேண்டும்.

தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த நெடும் பயணம் ஓயக்கூடாது.

முடிவுறாத ஒரு அஞ்சல் ஓட்டமாக இதை மாற்றினால்தான் இந்த எழுச்சித் தீ தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல, இந்த ஐரோப்பிய மண் எங்கும் அணையாது முளாசி எரியும்.

தமிழனுக்கு அநீதி இழைக்கப்பட்டதையும், நீதி மறுக்கப்பட்டதையும் இந்த ஐரோப்பிய மண்ணில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்வான்.

எங்கள் நீதிக்காக சிறு துரும்பையாவது அசைக்க முன்வருவார்கள்.

சிவந்தன் எடுத்து வைத்துள்ள முதலடியைப் பின்பற்றி அடுத்த அடிகளை எடுத்து வைப்போம்.

தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை…

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.