14வது நாளில் சிவந்தனின் நடைப்பயணம்! காவல்துறை பாதுகாப்பு! இத்தாலியில் இருந்து இணையும் மக்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 14வது நாளில் தனது மனிதநேய நடைப்பயணத்தை சிவந்தன் தொடர்ந்துவரும் நிலையில், அவருடன் இத்தாலியில் இருந்தும் மக்கள் இணைகின்றனர்.

இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நோக்கி தற்பொழுது சென்றுகொண்டிருக்கும் மக்கள் இன்னும் சில மணிநேரங்களில் தம்மையும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைத்துக்கொள்ள இருக்கின்றனர்.

அதேவேளை, பிரான்ஸ் மக்கள் 12 பேர் வரையில் தற்பொழுது சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்வதுடன், இன்று காலையில் இருந்து இவர்கள் இதுவரை 14 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளனர்.

நேற்றும் பலர் இணைந்து நடந்திருந்ததுடன், நடை பயணம் நிறைவுபெறும் வேளையிலும் சுமார் 50 பேர் வரையில் இந்த மனிதநேயப் பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர்.

Provins பிரதேசம் ஊடாக நடந்துகொண்டிருக்கும் சிவந்தன் Nogent-sur-seine என்ற இடத்தை நோக்கி நடந்து செல்வதுடன், பிரான்சில் இருந்தும் இளையோர் உட்பட மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.

நடந்து செல்லும் சிவந்தனுக்கும், ஏனைய மக்களிற்கும் அந்தப் பிரதேச காவல்துறையினர் தற்பொழுது முன்னுக்கும், பின்னுக்குமாக இரண்டு ஊர்திகளில் பாதுகாப்பு வழங்கிச் செல்லுகின்றனர்.

பரிஸ் இருந்து 88 கிலோமீற்றர் நடந்துள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 522 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.