11 இலட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும், எமது நாடு தொடர்பில் ஆலோசனை வழங்க அருகதையில்லை: ஹெல உறுமய

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் 11 இலட்சம் பொது மக்களை கொன்றுகுவித்த அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்குள் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அணியை உருவாக்குவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியதாவது:

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்து விட்டது. இக்கால கட்டத்திற்குள் எந்தவிதமான பயங்கரவாத அசம்பாவிதங்களோ தமிழ், சிங்கள மக்களிடையே முறுகல் நிலையோ ஏற்படவில்லை. இரண்டு இனத்தவரும் இணக்கப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

எனவே இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. பயங்கரவாதப் பிரச்சினையே காணப்பட்டது. பயங்கரவாதத்தை அழிப்பதில் எமது படையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். மனித உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டே யுத்தம் செய்தனர்.

ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் கொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கை இணையத்தளம் ஊடாக கசிந்துள்ளது. இதில் 90,000 யுத்தக் குற்றங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது வெளியே கசிந்தது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தென்றும் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

எனவே, இக்குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் எமது நாட்டில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு முன்பதாக அமெரிக்கா, பிரிட்டன் மேற்கொண்ட மனிதக் கொலைகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் விசாரணைகளை நடத்தவேண்டும்.

இதைவிடுத்து, மேற்கண்ட நாடுகளுக்கு சார்பாக ஐ. நா. அறிக்கைகளை வெளியிடுகின்றது. உலகின் வல்லரசு நாடுகளின் கைப்பொம்மையாக ஐ.நா. இன்று செயலாற்றுகிறது. எமது நாட்டில் பயங்கரவாதமே ஒழிக்கப்பட்டது. சிவிலியன்களை நாம் கொலைசெய்யவில்லை.

எனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக விசாரணைகளை நடத்த குழுவை அமைக்க வேண்டும். அதை விடுத்து, எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இவர்களுக்கு கிடையாது.

இங்கு உரையாற்றிய ஹெல உறுமயவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்னதேரர்,

சீனா, ரஷ்யா, ஈரான் உட்பட லத்தீன் அமெரிக்கா நாடுகள் ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற்று எமது நாட்டுக்கு எதிரான மேற்குலக நாடுகளின் சதியை முறியடிக்க வேண்டும்.

சீனா நேரடியாக எமக்கு ஆதரவை வழங்குகின்றது. ஆனால் இந்தியா மௌனம் சாதிக்கின்றது. அத்தோடு அமெரிக்காவினதும், பிரிட்டனினதும் யுத்தக் குற்ற அறிக்கை தொடர்பிலும் இராஜதந்திர ரீதியில் அந்நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.