15வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ளார்.

Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

நேற்று இத்தாலியில் இருந்து இணைந்துகொண்ட 7 பேர் இன்று இரண்டாவது நாளாகவும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர்.

Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக் காத்திருப்பதுடன், இந்த மக்களுடனான சிறிய சந்திப்பைத் தொடர்ந்து அவரது நடை பயணம் தொடர இருக்கின்றது.

Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிலரும் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துக்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் இருந்து 129 கிலோமீற்றர் தூரம் சென்றுள்ள சிவந்தன், ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை சென்றடைய இன்னும் 479 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) எழுச்சிக் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மனு கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.