முத்துக்குமார் நினைவுகளை தன்னுடைய மருத்துவ மனை டைரி குறிப்பு மூலம் மீண்டும் கிளறிவிட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி

muthu1நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்… கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுவருகிறது ஈழ விவகாரம். ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் நினைவுகளும் அதில் ஒன்றாகிவிட்ட நிலையில். முத்துக்குமார் நினைவுகளை தன்னுடைய மருத்துவ மனை டைரி குறிப்பு மூலம் மீண்டும் கிளறிவிட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் இருந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளை அரசியல் சம்பவங்களோடு கோத்து, ‘முரசொலி’யில் மினி தொடராக எழுதிவருகிறார் கருணாநிதி.

அதன் முதல் அத்தியாயத்திலேயே, முத்துக் குமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, தான் ஏன் போகவில்லை என்பதை விவரித்திருந்த கருணா நிதி, ‘உடல்வலியையும் மீறி முத்துக்குமாரின் மரணம் என் உள்ளத்தை வலிக்கச் செய்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கூடவே, முத்துக்குமார் குடும்பத் துக்கு முதலமைச்சரின் நிதி உதவியை அளிக்கச் சென்ற தி.மு.கழக எம்.எல்.ஏ-வான வி.எஸ்.பாபுவை ம.தி.மு.க-வினர் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

முத்துக்குமார், தன்னுடைய மரண சாசனத்தில் தி.மு.க-வையும் அதன் தலைவர் கருணாநிதியையும்தான் அதிகம் சாடியிருந்தார். இந்த நிலையில், திடீர் ‘முத்துக்குமார் பாச’த்துக்கு பலமான காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன. ”முத்துக்குமாரின் குடும்பத்தை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றி தி.மு.க-வுக்கு எதிரான பிரசார யுத்தம் நடத்த இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அந்த குடும்பம் தங்களை அரசியல் சுழலுக்குள் யாரும் இழுப்பதை விரும்பவில்லை. வைகோ மட்டும் அடிக்கடி முத்துக்குமார் வீட்டுக்குச் சென்று வந்ததுடன், மாடியில் அவர் பயன்படுத்திய அறையில் பல மணி நேரம் செலவழித்தார்.

இதோடு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துக்குமாரின் தங்கை பிரசவத்தை டாக்டர் கலாநிதி மருத்துவமனையில் தன் செலவில் கவனிக்கவும் ஏற்பாடு கள் செய்தார். ஆனால், அதையும் அந்தக் குடும்பம் ஏற்கவில்லை. அப்படியிருந்தும், சில உதவிகளை அந்தக் குடும்பத்துக்கு செய்திருக்கிறார் வைகோ. இதற்கிடையில், தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டு அவர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த அவரைக் காண முத்துக்குமாரின் குடும்பம் பாளையங்கோட்டைக்குப் புறப்பட்டது. அந்த சமயத்தில் முத்துக்குமாரின் தங்கை அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்க, இந்த செய்தி சிறையிலிருந்த வைகோவுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, ‘குழந்தைக் கான தாய்மாமன் செய்முறையை செய்ய அனுமதி வேண்டுகிறேன். இந்த வேண்டுகோளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள். உங்கள் அன்புக்கு ஏங்கி நிற்கும் வைகோ’ என்று வைகோவே தன் கைப்பட எழுதிய கடிதத்தை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களான வேளச் சேரி மணிமாறன், சு.ஜீவன் ஆகியோர் முத்துக்குமார் குடும்பத்திடம் சேர்த்தனர்.

அதைப் பார்த்துக் கலங்கிய அந்தக் குடும்பம், ‘வைகோவே குழந்தைக்கு முதல் சட்டையை எடுத்துக் கொடுக்கட்டும். எப்போது சிறையிலிருந்து வருகிறாரோ, அன்றைக்கு அவரே பெயரும் வைக்கட்டும்!’ என்று சொன்னது. இதைக் கேட்டு வைகோ உணர்ச்சிக் கொந்தளிப்பில் மிதந்தார். அடுத்த இரண்டு நாட்களில் வைகோ விடுதலையாகிவிட, பாளை சிறையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து… தி.நகரில் குழந்தைக்கு சட்டைகள், தங்கச் சங்கிலி, குல்லா, டர்க்கி டவல், மெத்தை, இனிப்புகள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு கொளத்தூரில் இருக்கும் முத்துக்குமார் வீட்டுக்குச் சென்றார். ‘என் மருமகள் எங்கே…’ என உரிமையோடு கேட்டு குழந்தையை உச்சி முகர்ந்த வைகோ, தங்கச் சங்கிலி போட்டு அழகு பார்த்தார்.

”நீங்களே பேரும் வச்சுடுங்க…” என முத்துக்குமாரின் அப்பா கூற, ”உங்களுக்கு குலதெய்வம், இன்ன பேர்தான் வைக்கணும்னு கடமைகள் இருக்கும். அதில் தலையிட நான் விரும்பவில்லை!” என்றாராம் வைகோ. ”பரவாயில்லை… நீங்கள்தான் பெயர் வைக்கணும்” என்று மொத்தக் குடும்பமும் வற்புறுத்த, முத்துக்குமாரை நினைவுகூரும் வகையில் ‘முத்தெழில்’ என்று பெயர் சூட்டி யிருக்கிறார் வைகோ. அன்று அங்கேயே சாப்பிட்ட வைகோ, ‘அடுத்து நாங்க போடற கூட்டத்துக்கு நீங்க வரணும். அரசியல் பேச வேண்டாம். ஆனால், நாங்க கொடுக்கும் நிதியை நீங்க வாங்கிக்கணும். இது நான், நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு. அடுத்த கூட்டம் வேலூர்ல நடக்குது. அங்க வந்து நிதியை வாங்கிக்கணும்!’ என்று சொல்லியிருக்கிறார்.

நீண்ட தயக்கத்துக்குப் பின்பு வேலூருக்குச் செல்ல அந்தக் குடும்பம் முடிவு செய்தது. வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் முத்துக்குமார் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதெல்லாமே ஆளும் தி.மு.க-வின் தலைமைக்கு எப்படி தெரியாமலிருக்கும்?

‘வைகோவின் அன்பில் நெகிழ்ந்திருக்கும் அந்தக் குடும்பம், தேர்தல் சமயத்தில் பிரசாரத்துக்கு வரக்கூடிய வகையில் மனம் மாறியிருந்தா லும் வியப்பில்லை’ என்ற சிந்தனை தி.மு.க. தலைமைக்கு எழுந்திருக்க வேண்டும்! மேலும், வைகோவை அடுத்து ஜெயலலிதாவும் நேரில் சென்று முத்துக்குமார் குடும் பத்தை சந்திக்கப் போவதாகவும் உளவுத்துறை ‘நோட்’ போட்டிருக்கிறதாம். இதற்கெல்லாம் வழி ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் கருணாநிதி தன்னுடைய மருத்துவமனை டைரியின் முதல் அத்தியாயத்திலேயே முத்துக்குமாரை ஹீரோவாக்கி உருகியிருக்கிறார்!” என்று அரசியல் வட்டாரங்களில் அடித்துச் சொல்கிறார்கள்.

”முத்துக்குமாரின் தியாகத்தை அரசியலாக்குவது நியாயமா? தமிழக அரசு நிதியை கொடுக்கப்போன தி.மு.கழக எம்.எல்.ஏ-வை தாக்கியது நாகரிகமா? முதல்வரின் ஆதங்கம் குறித்து உங்கள் பதில் என்ன?” என்று வைகோவிடம் கேட்டோம்.

”முத்துக்குமாரின் தியாகம், கலைஞரை வாட்டுகிறது. எங்கே தேர்தல் காலத்தில் அந்தத் தியாகம் விஸ்வரூப மெடுத்து தி.மு.க-வை வீழ்த்திவிடுமோ என்ற கவலையில் டைரி குறிப்பு எழுதுகிறார். நாங்கள் அந்தத் தியாகத்தை அரசியலாக்க மாட்டோம். எம்.எல்.ஏ-வான

வி.எஸ். பாபுவை சூழ்ந்துகொண்ட கூட்டத்தை நான்தான் கலைத்து, சமாதானப்படுத்தினேன். மரண வீட்டுக்கு வந்தவர் எதிராளியாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்று மைக்கிலேயே அறிவித்தேன். முத்துக்குமார் விவகாரத்தை அரசியலாக்குவது கலைஞர்தான், நாங்கள் அல்ல! முத்துக்குமார் மிகவும் நேசித்த அவருடைய தங்கைக்கு நானும் ஒரு அண்ணனாக இருக்கவே ஆசைப்பட்டேன். அதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை!” என்று உணர்ச்சிப் பிழம்பானார்!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.