சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக வானூர்தி நிலையம்: சேவைகள் 2012ல் ஆரம்பம்

அம்பாந்தோட்டைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் நாட்டின் இரண்டாவது அனைத்துலக வானூர்தி நிலையம் 2012ம் ஆண்டு நடுப்பகுதியில் தனது பணியினை ஆரம்பிக்கும் என வானூர்தி நிலைய மற்றும் வானூர்திப் போக்குவரவு சேவைகளின் தலைவர் பிரசன்ன ஜே விக்கிரமசூரிய கூறுகிறார்.

வானூர்தி நிலையக் கட்டுமானப் பணிகளின் முதலாவது கட்டம் முடிவுக்கு வர, சிறிலங்காவிற்கு இன்னொரு அனைத்துலக வானூர்தி நிலையம் அவசியமானது என்ற நீண்ட நாள் தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் 2012ம் ஆண்டு மாத்தல வானூர்தி நிலையத்தில் முதலாவது வானூர்தி வந்திறங்கும்.

2,000 ஏக்கர் நிலப்பரப்பில் 209 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த வானூர்தி நிலையக் கட்டுமானப் பணிகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டை நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக 2009ம் ஆண்டு நவம்பர் 27ம் நாளன்று அன்று இந்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானத் திட்டங்களை குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்தார்.

வானூர்திநிலையம் மற்றும் வானூர்திப் போக்குவரவுத் துறையினது ஐ.சி.ஏ.ஒ [ICAO] போன்ற அதிசிறந்த அனைத்துலக தரச்சான்றினைப் பெறும் வகையில் அம்பாந்தோட்டை வானூர்தி நிலையக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதலாவது கட்டத்தின்கீழ் 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கொண்ட வானூர்தி ஓடுதளம் தற்போது நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

உலக வரலாற்றில் இதுவரை கட்டப்பட்ட அளவில் பெரிய போக்குவரவு விமானமான ஏ 380 போன்ற விமானங்கள் கூட வந்திறங்கும் வகையிலேயே இந்த ஒடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது என துறைமுகங்கள் மற்றும் வானூர்திப்போக்குவரவு அமைச்சினது செயலாளர் றஞ்சித் டீ சில்வா கூறுகிறார்.

தண்ணீர் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வெறும் நிலம் வானூர்தி நிலையக் கட்டுமானப் பணிகளுக்காகக் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

வானூர்தி நிலைய நிர்மாணப் பணிகளின் முதலாவது கட்டத்தின் கீழ் 800 கெக்ரெயர் நிலம் பெறப்பட்டிருக்கும் அதேநேரம் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்காக மேலும் 1200 கெக்ரெயர் நிலம் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வானூர்தி ஓடுதளம், வானூர்திப் போக்குவரவுக் கட்டுப்பாட்டுக் கோபுரம், வானூர்திகள் ஓடுதளத்திற்கும் ஓடுதளத்திலிருந்தும் பயணிப்பதற்கான பாதை, சரக்குகளை வானூர்தியில் ஏற்றுவதற்கான பகுதி, வானூர்தி நிலையத்திற்குச் செல்லும் வீதிகள், அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகள், எண்ணெய் சேமிப்பகங்கள், நீதி வழங்கல் வசதிகள், வானிலை ஆய்வு மையம், தீயணைக்கும் வசதிகள், உணவகங்கள் மற்றும் வாகனத் தரிப்படம் என்பன வானூர்தி நிலையக் கட்டுமானப் பணிகளின் முதலாவது கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் என டீ சில்வா கூறுகிறார்.

நாட்டினது கௌரவத்தையும் மரபுரிமையினையும் உணர்த்தும் வகையில் அனைத்துக்கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

உதாரணமாக, வானூர்தி நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரமானது தாமரை மலரை ஒத்ததாக அமைக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

1200 கெக்ரெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளின் கீழ் வானூர்திநிலையம் மற்றும் வானூர்திப் போக்குவரவுடன் தொடர்புடைய அனைத்து வசதிவாய்ப்புகளும் நிர்மானிக்கப்படும்.

வானூர்திகளைச் சுத்திகரிப்பதற்கான, திருத்துவதற்கான மையம், உல்லாச விடுதிகள், இளைப்பாறும் இடங்கள், வானோடிகளைப் பயிற்றுவிப்பதற்கான மையம், பராமரிப்பு மையம், தனியார் வானூர்திகள் தரிப்பதற்கான பகுதி, தொழிநுட்ப பயிற்சி மையம் உள்ளிட்ட பல அம்சங்கள் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமைபெறும் என துறைமுகங்கள் மற்றும் வானூர்திப் போக்குவரவு அமைச்சினது செயலாளர் றஞ்சித் டீ சில்வா மேலும் கூறினார்.

இந்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் வருடாந்தம் ஒருமில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தின் ஊடாக வந்துசெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வருடமொன்றுக்கு 45,000 மெற்றிக்தொன் வான்வழிச் சரக்குகள் கையாளப்படும் அதேநேரம் வருடாந்தம் 30,000 வானூர்திகள் வந்துசெல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய வானூர்தி நிலையமானது 2,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பினையும் கருத்திலெடுக்கக்கூடிய தொகையினருக்கு மறைமுக வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொடுக்கும்.

அம்பாந்தோட்டை வானூர்தி நிலையத்தின் வரவு உள்ளூர் போக்குவரத்துத் தொழில்துறை செழிப்புறுவதற்கு வழிசெய்வதோடு நாட்டினது தென்மாகாணத்தினது பொருளாதார அபிவிருத்திக்கான பிரதான காரணியாக அமையும்.

இதன் விளைவாக, இந்தப் பிராந்தியத்தில் அனைத்துலக வர்த்தகம், உல்லாசப்பயணத்துறை, தொழிற்பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களைப் பெரிதும் அதிகரிக்கும் என துறைமுகங்கள் மற்றும் வானூர்திப்போக்குவரவுக்கான பிரதியமைச்சர் றோகித அபயகுணவர்த்தன கூறுகிறார்.

மேலும் இலங்கைத் தீவில் தற்போதிருக்கும் ஒரேயொரு அனைத்துலக வானூர்தி நிலையமான பண்டாரநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு மாற்றீடாக இது அமையும் என பிரதியமைச்சர் மேலும் கூறுகிறார்.

பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் நான்கு தசாப்தங்களின் முன்னர் தனது பணியினை ஆரம்பித்தது. நாட்டில் இன்னொரு அனைத்துலக வானூர்தி நிலையம் இல்லாதமையினால் நாடு பெரும் நெருக்கடியினைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறது.

இதனடிப்படையில் இரண்டாவது அனைத்துலக வானூர்தி நிலையம் அமைக்கப்படுவதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என துறைமுகங்கள் மற்றும் வானூர்திப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் தயாசிறீத திசார கூறுகிறார்.

அம்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகம் மற்றும் அனைத்துலக வானூர்தி நிலையம் என்பன இந்தப் பிராந்தியத்தில் வான்வழி மற்றும் கடல்மார்க்கச் சரக்குகளைக் கையாளும் பிரதான மையமாக மாறும் என திசார கூறுகிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.