ரஸ்யாவின் ஏவுகணைப் போர்க்கப்பல் கொழும்பு வருகிறது

ரஸ்யாவின் கருங்கடல் கப்பல் பிரிவின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது.

மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக எதிர்வரும் 13ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள ரஸ்யப் போர்க்கப்பல் எதிர்வரும் 15ம் திகதி வரை இங்கு தரித்திருக்கும்.

ரஸ்யக் கடற்படையிடம் உள்ள மிகப்பெரிய ஏவுகணைப் போர்க்கப்பல்களில் ஒன்றான-‘ஸ்லாவா’ வகையைச் சேர்ந்த ‘மொஸ்க்வா’ என்ற போர்க்கப்பலே கொழும்பு வரவுள்ளது.

இந்தக் கப்பல் 186.4 மீற்றர் நீளத்தைக் கொண்டது.

இதில் 51 அதிகாரிகாரிகள் மற்றும் 464 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

இந்த பாரிய ஏவுகணைப் போர்க்கப்பலில் அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதிகள் மற்றும் பாரிய போர்க்கலன்கள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஸ்யப் போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது அதிலுள்ள கடற்படையினர் சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்குபடுத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் போர்ப்பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.

அண்மைக்காலமாக சிறிலங்காவுக்கு வெளிநாட்டு கடற்படைக் கப்பல்களின் வருகை அதிகரித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா,தென்கொரியா, இந்தியா போன்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் சிறிலங்கா வந்திருந்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.