சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் பிரான்ஸ் நகரசபை உறுப்பினரும் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் பிரான்ஸ் நகரசபை உறுப்பினரும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.

இன்று காலை Troyes என்ற இடத்தில் இருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சிவந்தனுடன் பரிஸ் லாக்கூர்னோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனியும், தமிழ் மக்களும் மக்களும் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

நேற்று முன்தினம் போன்று நேற்றும் மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த சிவந்தன், இன்று காலை முதல் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்த நிலையில் சில கிலோமீற்றர்கள் நடந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 2:30 மணிளவில் Troyes நகரை சிவந்தனும், அவருடன் மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளுபவர்களும் சென்றடைந்தபோது 60 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவர்களை வரவேற்று, அங்கு சிறிய ஒன்றுகூடலும் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

இன்று காலை முதல் Chaource நோக்கி நடந்து செல்லும் சிவந்தனுடன் 11 பேர் இணைந்து நடந்து செல்வதுடன், மேலும் பலர் பரிஸ் நகரில் இருந்து இணைந்துகொள்ள இருக்கின்றனர்.

பரிஸ் நகரில் இருந்து 172 கிலோமீற்றர்கள் தூரம் நடந்துள்ள சிவந்தன், லியோன் நகரம் செல்லாது லியோன் கரையோரம் வழியாக தனது பயணத்தை மேற்கொள்ள இருப்பதால், இன்னும் 325 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

பிரான்சின் கடற்கரையான கலைஸில் இருந்து 516 கிலோமீற்றர் நடந்துள்ள சிவந்தன், அதற்கு முன்னர் லண்டனில் இருந்து டோவர்வரை நூற்றிற்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்திருந்தார்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) எழுச்சிக் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மனு கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.