கப்பலில் வரும் அகதிகளுக்காக கனடாவில் சிறைச்சாலை தயாராகின்றது

தாய்லாந்துக் கப்பலான சன் சீ கப்பலில் வந்துகொண்டிருக்கும் 200 க்கும் மேற்பட்ட அகதிகள் குறித்து தமக்கு தொடர்ச்சியாகத் தகவல்கள் வந்துகொண்டிருப்பதாக கனடாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இக்கப்பலில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள் என்பதை நம்பக்கூடிய காரணம் இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டோய்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் மேற்படி விவரங்களைத் தர மறுத்துவிட்டார். இந்த வாரமே இக்கப்பல் பசிபிக் கடற்கரை மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க கடலோரக் காவற்படையினரும் இக்கப்பலைக் கண்காணித்து வருகின்றனர்.

இக்கப்பலில் வருபவர்களைத் தடுத்து வைப்பதற்காக பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இரு சிறைச்சாலைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னொரு அதிகாரி தெரிவித்தார். இனி வரும் நாட்களில் 500 பேர் வரையான தமிழ் குடிபெயர்வாளர்கள் அல்லது அகதிகளைத் தடுத்து வைப்பதற்கு சிறைச்சாலைகளில் அதிகாரிகளைத் தயாராக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனராம்.

மேலும் தற்போது வரும் அகதிகளில் 60 பெண்களும், 40 சிறுவர்களும் அடங்கக்கூடும் எனவும் தெரிவித்த ஒரு அதிகாரி, இந்த வாரக் கடைசியில் இக்கப்பல் வன்கூவரிலுள்ள விக்டோரியாவை அடையும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கனடா அரசானது கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் தடைசெய்துள்ளது. எனவே அகதிகள் என்ற போர்வையில் புலிகளும் தமது நாட்டில் நுழைந்துவிடக் கூடாது என்பதில் தாம் விழிப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.