உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு வவுனியாவிற்கு விஜயம்

தற்போது கலைக்கப்பட்டுள்ள சமாதான செயலகத்தின் முன்னாள் தலைவர் பெர்னாட் குணதிலக்கவிடம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சாட்சியங்களைத் திரட்ட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கக் குழுவில் பெர்னாட் குணதிலக்கவும் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உண்மையக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர். டி சில்வா தலைமையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பொதுமக்களிடம் சாட்சியங்களைத் திரட்டும் பணிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் எனத் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 25ம் திகதி வரையில் முக்கிய அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் புத்தி ஜீவிகள் ஆகியோரிடம் சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.எம். சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

எஸ்.எல்.குணசேகர, வீ.ஆனந்தசங்கரி, கொட்ப்ரி குணதிலக்க, ஹிராந்தி விஜயமான, மங்கள சமரவீர, நிஹால் ரொட்ரிகோ, ஒஸ்டின் பெர்னாண்டோ, ராஜன் ஆசீர்வாதன், ராஜீவ விஜேசிங்க, மானேல் அபேசேகர, ஜயந்த தனபால மற்றும் அசோக குணசேகர ஆகியோரிடம் சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு வவுனியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.