படகில் ஏறிய பின்னர் தொடர்பு எதுவும் இல்லை

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்காகக் கடந்த மாதம் 19 ஆம் திகதி கடல்வழியாகப் புறப்பட்டுச் சென்ற தமது மகன், மகள் ஆகியோருடைய குடும்பங்கள் உட்பட தமது உறவினர்களான 9 பேர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து தகவல் தருமாறு வவுனியா கற்குழியைச் சேர்ந்த வி.க.நாகேந்திரன் (56) என்பவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரியிடம் கோரியுள்ளார்.

வி.க.நாகேந்திரனின் மகன் துதஸ்குமார் (27), துதஸ்குமாரின் மனைவி வித்யா (22), அவர்களது பிள்ளையாகிய கேசவன் (02) ஆகியோரும், நாகேந்திரனின் மகளாகிய உதயசீலன் சசீதா (30), அவரது குழந்தைகளான உதயசீலன் உசான் (10), உதயசீலன் மதியரசி (07) ஆகியோரும், நாகேந்திரனின் மருமகளாகிய கிருஸ்ணமூர்த்தி சிந்துஜா (16), நாகேந்தரனின் சகோதரரின் பிள்ளைகளாகிய இராஜேந்திரன் சுஜீவன் (17), இராஜேந்திரன் ரபீபன் (16) ஆகியோரையே காணவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இவர்கள் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்காகப் படகில் ஏறியதாகவும், அதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு எதுவும் இல்லையென்றும், இவர்கள் எங்குள்ளார்கள் என்பது தெரியாமல் இருப்பதாகவும் நாகேந்திரன் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து தருமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்திருந்தால், அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்குத் தெரிவித்து உதவுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட இணைப்பதிகாரி, பாதுகாப்புத் துறை அதிகாரிகள், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.