வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் பாரிய சுற்றுலா விடுதி

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் பாரிய சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாகவும் தொல் பொருள் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை ஆகியவற்றின் அனுமதியின்றி இந்த அமைச்சர் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

உள்நாட்டு வெளிநாட்டு மக்களிடம் மதிப்பை பெற்றுள்ள நல்லூர் கந்தசாமி ஆலயம் தமிழ் மக்களின் உயரிய வழிப்பாட்டு தளமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு அருகில் சுற்றுலா விடுதி நிர்மாணிக்கப்படுவதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனை, தவிர வவுனியா நிராமுனைகண்டி ஆலயத்திற்கு அருகிலும் சட்டவிரோமாக சுற்றுலா விடுதியொன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தினர் மட்டக்களப்பு பாசிக்குடா கரையோரத்தில் 5 நட்சத்திர விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விடுதியை அமைப்பதற்கு தேவையான காணிகளை சுவிகரிப்பதற்காக ஆயுதம் தாங்கிய குழுவினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனை தவிர அம்பாறை பாணம பிரதேசத்தில் குமண வனவிலங்கு சரணாலய பகுதியில் சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக அந்த பகுதியில் குடியிருந்த மக்களின் வீடுகள் தீவைக்கப்பட்டு, அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிராக பிரதேச மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அத்துடன் அருகம்பை பிரதேசத்தில் சுற்றுலா விடுதி அமைக்கப்படவுள்ளதுடன் அருகம்பபை பிரதேசத்தில் பல காணிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனை தவிர ராஜபக்ஷ குடும்பதைச் சேர்ந்த ஒருவர் நீர்கொழும்பு களப்பு பகுதியில் பாரிய சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிக்கவுள்ளார். சீ பிளேன் விமானங்களை இறக்கும் வசதிகளுடன் இந்த சுற்றுலா விடுதி அமைக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் சுற்றுலா துறை வளர்ச்சியொன்ற பெயரில் இந்த சகல நிர்மாணப்பணிகளும் சட்டத்திற்கு முரணான வகையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன.

ராஜபக்ஷவினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நாட்டில் உள்ள பெறுமதிமிக்க காணிகள் சுற்றுலா விடுதிகளை அமைப்பதற்காக வழங்கப்படுவதன் மூலம் நாட்டில் சுற்றுச் சூழல் மற்றும் தொன்மை அழிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.