பரீட்சை எழுத வந்த மாணவி கட்டிவைக்கப்பட்ட நிலையில் மீட்பு

கண்டியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவியொருவர் நேற்று க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வந்திருந்த போது, பாடசாலை வகுப்பறையொன்றில் வாயும் கைகளும் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாணவி பரீட்சை மண்டபத்தில் காணப்படாத நிலையில் பரீட்சை அதிகாரிகள் அவரைப் பற்றி மற்றைய மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். அந்த மாணவி பரீட்சையில் தோற்றுவதற்காக பாடசாலைக்கு வந்ததை கண்டதாக சில மாணவியர் பரீட்சை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் நடத்திய போது, குறிப்பிட்ட மாணவி வாயில் பழந்துணி அடைக்கப்பட்டு கைகள் பிணைக்கப்பட்டு, நாற்காலி ஒன்றுடன் சேர்த்து கட்டப்பட்டபடி வெறுமையாக இருந்த வகுப்பறையொன்றில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பரீட்சை தொடங்கி அரை மணி நேரத்துக்கு பின்னரே இந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் பரீட்சை ஆணையாளரின் அங்கீகாரத்துடன் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீசார் இந்த மாணவி பாடசாலை அதிபர் ஒருவரின் மகள் என்றும் நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.