கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் 116 பேர் இன்று விடுதலை

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் 116 பேர் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பினாங்கு கடற்கரையில் தடுக்கப்பட்ட இவர்கள் நாட்டின் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடற் பயணம் மேற்கொண்டதாக கடற் படையினரால் வளைக்கப்பட்டு குடிவரவு அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

உண்மையில் இவர்கள் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பி மேற்கத்தியநாடுகளில் ஒன்றை குறிவைத்து பயணப்பட்டதாகத் தெரிகிறது.எது எப்படி ஆயினும் பாதை மாறி பயணித்த இவர்களை கைது செய்த மலேசிய அரசாங்கம், ஐ.நா மன்றத்தின் அகதிகள் ஆணைய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததற்காக இங்குள்ள ஈழத்தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக வடவன் என்ற ஈழத் தமிழர் கூறினார்.

பிறந்தது முதலே குண்டு வீச்சுக்கும், இரவு நேரடி கைதுக்கும் இடையே அஞ்சியஞ்சி வாழ்ந்த இவர்கள் போர் முடிந்த பின்னும் சொந்த மண்ணில் நிம்மதியைப் பெற முடியாததால் ஈழத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன் புறப்பட்டதாகத் தெரிகிறது.

பொதுவாக வெளி நாடுகளுக்கு பறக்க விரும்பும் மக்களுக்குரிய பயண முனையமாகத் திகழும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம், இந்த 116 பேருக்கும் தடுப்பு முகாமாக மாறியது சோகம் தான். கோலாலம்பூரில் இருக்கும் ஐ.நா அகதிகள் ஆணைய அதிகாரிகளின் பொறுப்பில் இந்த 116 பேரும் நேற்றே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.வாகன வசதி ஏற்பாட்டில் ஏற்பட்ட சுணக்கத்தினால் இன்று இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இவர்களில் 10 பேர் பெண்கள்;6 பேர் சிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் ஐ.நா அகதிகளுக்கு உரிய அட்டைகள் வழங்கப்பட்ட பின் இவர்களுக்கான தங்குமிட வசதி வருமானத்திற்குரிய சூழல் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை.

இது பற்றி கருத்து தெரிவித்த மலேசியத் தமிழர் பேரவைத் தலைவர் டத்தோ சிவசுப்பிரமணியம், “இந்த ஈழத்தமிழர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள்.மனிதக் கடத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் இவர்களைத் தடுத்த மலேசிய அரசு அப்பொழுதே விடுவித்திருக்க வேண்டும்.

எனினும் இவர்களை விடுவிக்க வேண்டும் என்று மலேசியத் தமிழர் பேரவை தொடர்ந்து எழுப்பிய குரலுக்கும்,மற்றத் தரப்பினரின் கருத்துக்கும் செவி சாய்த்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.