ஐ.நா.வின் திட்டம் தமிழர்களை வலிந்து சரண்டையவைக்கும் யுக்தியே: கஜேந்திரன்

kajendranஇலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசு முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் திட்டம், கொழும்பின் கொலைகார கரத்திற்கு கையளிக்கவே உதவும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார்.

முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தி்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் பகுதியில் மிகப் பெரிய மனித அவலம் தொடர்கிறது என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் அங்கு தாக்குதல் நிறுத்தம் செய்து அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் இந்த கோரிக்கை, தமிழர்களை இனப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசிற்கு உதவுவதாகவே அமையும் என்று கூறியுள்ளார் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போர் பகுதியில் இருந்து கடல் வழியாகவோ அல்லது நில வழியாகவோ வெளியேற்றும் மக்களை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் குறிப்பிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர் நடக்கும் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய மக்களை சிறிலங்கா அரசு முட்கம்பி வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. அதேபோன்று போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்களையும் அப்படிப்பட்ட முகாம்களுக்கு கொண்டு சென்று அடைப்பது அவர்களை சிறிலங்கா அரசிடம் பலவந்தமாக சரணடையச் செய்வதாகும் என்றும், அது ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் கொழும்பின் திட்டத்திற்கு உதவுவதாகவே ஆகும் என்று கூறியுள்ளார்.

போர் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய, வெளியேற்றப்பட்ட மக்களை இப்படிப்பட்ட முகாம்களில் அடைத்து வைத்து சிறிலங்கா இராணுவம் சித்திரவதை செய்து வருவதை கண்டுகொள்ளாமல் ஐ.நா. மனித உரிமை ஆணையம் எங்கே சென்றிருந்தது என்றும் கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“போர் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் சம்மதமின்றி, அவர்களை வலிந்து வெளியேற்றுவது, சில சுய நல அரசுகளின் விருப்பத்தி்ன்படி, சிறிலங்கா இனவெறி அரசிற்கு உதவும் ஒரு நடவடிக்கையாகும்” என்று கூறியுள்ள கஜேந்திரன், “ஐ.நா.வும் அதன் மனித உரிமை அமைப்பும் ஈழத்தில் வாழும் அப்பாவி மக்கள் மீது யார் போர் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதையும், யார் போர் குற்றவாளிகள் என்பதையும் நடுநிலையுடன் நின்று நியாயத்தை கூறிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இலங்கைத் தீவில் நிலவும் அவலத்தை துடைக்க எந்தப் பொறுப்பும் ஏற்காத, போர் பகுதியில் இயங்கி வந்த தனது துணை அமைப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்ட ஐ.நா. அமைப்பிற்கு, அப்பாவி மக்களை காப்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ள கஜேந்திரன், ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவையில் விவாதிப்பதில் கூட எப்படிப்பட்ட வஞ்சக வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதை கடந்த சில வாரங்களாகவே கண்ணுற்றுத்தான் வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.