சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி நடை பயணம்

சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொள்ள தமிழின உணர்வாளர்கள் மூவர் தன்னெழுச்சியாக முன்வந்துள்ளனர்.

• சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
• தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
• மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 09:30 மணியளவில் சூரிச் ஹெல்விற்சியாபிளட்ஸ் (Helvetiaplatz) இல் இருந்து மூவர் இந்த நடை பயணம் ஆரம்பிக்க இருக்கின்றனர்.

செல்வராஜா வைகுந்தன், விபுலானந்தன் கௌரிதாசன், சிவராசா ஜெயானந்தன் ஆகியோரே சூரிச், அறோ, சொலத்தூண், பேர்ண், பிறைபூர்க், லவுசான், மற்றும் ஜெனீவ் ஊடாக சுமார் 300 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல இருப்பதால், அந்தந்தப் பிரதேச மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா செல்லும் சிவந்தனை வரவேற்க சுவிற்சர்லாந்தின் பிரதான அரசியல் அமைப்புக்களான ஈழத்தமிழரவை, மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

கடல் கடந்து சுவிஸ் தேசம் வரும் சிவந்தனின் மனிதநேயத்திற்கும் தாய்நிலப்பற்றுக்கும் மதிப்பளித்து எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜரோப்பா தழுவிய தேசிய இன எழுட்சி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கும் இவ்வேளை, அனைத்து சுவிஸ் மக்கள் சார்பிலும் தாம் சிவந்தனை எழுச்சியுடன் வரவேற்க இந்த மனிதநேய நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சுவிசில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழ் உணவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது சிவந்தனின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட இருப்பதுடன், எமது மக்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இவர்கள் மூவரும் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புகளுக்கு
079 308 06 69
079 301 59 95
079 928 25 00

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.