பிரெஞ்சு மக்களைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலை தொடர்பாக சிவந்தன் விளக்கம்

ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரெஞ்சு மக்களைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலை தொடர்பாக விளக்கம் அளித்து வருகின்றார்.

பரிஸ் நகரில் இருந்து 373 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 173 கிலோமீற்றர்களே இருக்கின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு போதிய கால அவகாசம் இருக்கும் நிலையில், பிரெஞ்சு மக்களைச் சந்தித்து விளக்கமளிக்கப்படுகின்றது.

லண்டனில் இருந்து மொத்தம் 802 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்று 8 பேர் வரையில் இணைந்து நடக்கின்றனர். இவர்களில் கரிகரன் பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து தொடர்ச்சியாக இணைந்து நடந்து வருகின்றனார். வினோத், துஸ்யந்தன் ஆகியோர் பரிஸ் நகரில் இணைந்து தொடர்ச்சியாக நடந்து வருகின்றனர்.

பொஸ்கோ, மகிந்தன். ராஜ், இலக்கியன் போன்றவர்கள் அவ்வப்பொழுது இணைந்து நடக்கின்றனர். லண்டனில் இருந்து சென்றுள்ள ரட்னேஸ், ராம் போன்றவர்களும் நேற்று முதல் இந்த மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். ராம் அதிக தூரம் நடக்க முடியாத மாற்று வலுவுள்ளவராக இருக்கின்ற போதிலும், லண்டனில் இருந்து சென்று நடந்து செல்லுகின்றார்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.