மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும்

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி,கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை,தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில்,இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும், வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர்.

படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு,ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது.

சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு, ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது.அந்த குழுவின் விசாரணையில் தமிழர்களுக்கு நீதிகிடைக்காது என்பதே கடந்தகால அனுபவம்.

இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம்,

இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.