உங்களின் கைகளில் உள்ள தமிழரின் எதிர் காலத்தினை பறிகொடுத்து விடாதீர் புலம் பெயர் ஈழத்தமிழர்களே!

annaiதமிழர் தாயகப்பகுதிகளில் சிறீலங்காவின் வடபகுதியில் நீண்டு சென்ற இனப்பிரச்சினையும் தமிழீழ தாயகத்துக்கான விடுதலை யுத்தமும் இன்று மிகவும் முக்கியத்துவமான காலகட்டத்தில் வந்து நிற்கின்றது. இது பலராலும் கூறப்பட்ட விடயம். ஆனால் இவ் முக்கியமான கட்டத்தில் நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் தாயக வாழ் தமிழ் உறவுகளை போன்று முக்கியத்துவம் பெற்று போராட்டத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கின்ற தமிழ் மக்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கின்ற மிகப் பெரும் பொறுப்பும் கடமையும் புலம்பெயர் மற்றும் உலக வாழ் தமிழ் மக்களின் கைகளில் இடப்பட்டுள்ளது.

தாயகத்தில் நடக்கும் விடுதலைப் பயணத்தில் இதுவரை புலம்பெயர் உறவுகளாகிய நாங்கள் உதவியாளர்களாகவும் கருத்தாளர்களாகவும் வெற்றிகளை பகிரும் பங்காளிகளாகவும் மாத்திரம் பங்காற்றி வந்துள்ளோம். எனினும், தற்போது புலம்பெயர் ஈழத்தமிழர் எல்லோரும் புதியதொரு சமர்க்களம் திறந்து உலக அரங்கில் போராடப் புறப்பட்டுள்ளோம். போராடியும் வருகின்றோம்.

தேசியத்தலைவர் கூறியது போன்று போராட்ட வடிவங்கள் மாற்றப்படலாம் இலட்சியங்கள் மாற்றமடையாது என்பதற்கிணங்க. சர்வதேச அரங்கிங்குள் எமது விடுதலைப் போராட்டத்தினை கொண்டு வருவதற்கும் இனிவரும் காலங்களில் ஈழ விடுதலைப் போராட்டம் சிறீலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் மட்டுமன்றி சர்வதேசம் எங்கும் எதிரொலிக்கச் செய்யும் பணியை நாம் கையில் எடுத்துள்ளோம்.

இதில் முக்கியமாக சில விடயங்கள் நாம் கருத்தில் எடுக்கவேண்டும்.விடுதலைப் பயணங்கள் வலிகளும் இழப்புகளும் நிறைந்தவை இது உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டுள்ளது.

இழப்புக்கள் என்று கூறும் போது பலதரப்பட்ட வகைகளில் இழப்புக்கள் ஏற்படும். இது விடுதலைப் பயணங்களில் தாக்கம் ஏற்படுத்துவதாக அமையலாம். இல்லை விடுதலைக்கான தேவையை விடுதலைக்காக நாம் தேர்ந்தெடுக்கவேண்டிய பாதைகளை உணர்த்தி நிற்கின்ற இழப்புகளாக இருக்கலாம். அதாவது சொத்திழப்பு, மக்களின் இழப்பு, போராளிகளின் இழப்பு,  நிலப்பரப்புக்களின் ஆக்கரமிப்பு என இன்று தமிழர் தாயத்தில் விடுதலைக்கான பயணத்தில் இழப்புக்களை வேறுபடுத்தலாம்.

சிறீலங்காவின் காலனித்துவ விடுதலை, பெரும் இழப்புகள் மற்றும் வலிகளைச் சந்திக்கவில்லை அதாவது பெருமெடுப்பில் பெரும் விலை கொடுத்து போராட்டம் நடக்கவில்லை. அது மட்டுமன்றி வெள்ளையர்களிடம் சுதந்திரம் கேட்கும் அளவிற்கு நாம் முட்டாள்கள் இல்லை என்னும் வாதத்தினை முன்வைத்தோரும் உண்டு. இது இன்றும் ஈழ விடுதலையில் எதிரொலிக்கின்றது. பலரது கருத்துக்கள் இன்றும் இதைச்சார்ந்து ஒலிக்கின்றது.

அதாவது உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்பு ஏற்படும் போது தமிழர்களாகிய நாங்கள் சலிப்படைந்து விடுபவர்களாக அல்லது விமர்சிப்பவர்களாக காணப்படுகின்றோம் விமர்சனங்களை முன்வைக்கின்றோம். இது நீங்கள் அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டிய விடயம். இன்றுதான் இவ்வாறு உள்ளது அன்றைய காலங்களில அவ்வாறு இருந்ததில்லை. காரணம் சிறீலங்காவின் பரப்புரை இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. உண்மைகளுக்கு அப்பால் விரிந்து நிற்கின்றது.

இது எங்கள் தவறல்ல எம் முன்னோர் விடுதலையின் வலிகளை பெரிதாகச் சுமக்கவில்லை அல்லது தெரிந்திருக்கவும் இல்லை. இது உண்மை. அதாவது காலனித்துவ விடுதலைக்கு தமிழர் சிங்களவர் இருவரும் பெருமளவில் போராடவில்லை பாரத தேசத்தின் கருத்துக்களை உள்வாங்கி அதன்படி நடந்ததுடன் அக்கருத்துகளுக்கு தாமும் ஒத்துழைப்பு வழங்குவதாக மேடைகளில் பேசியது தான் நடந்தது. இதைத்தான் விடுதலைக்காக அவர்கள் போராடியதாக நாங்கள் தெரிந்து வைத்துள்ளது.

இதனால் எமக்கு அவர்கள் விடுதலை பற்றி சொல்லித் தரவில்லை. அது பற்றி நாம் பெரிதாக தெரிந்திருக்கவில்லை என்பது வெளிப்படை.
காந்தீய தேசத்தின் விடுதலையை நோக்கினால் முதலில் சாத்வீக வழியிலும் பின்னர் சிறிது சிறிதாக சிப்பாய் கலகத்தில் ஆரம்பித்து நேதாஜியின் போர்ப்படை வரை சென்று இறுதியில் விடுதலையில் முடிந்தது. அங்கும் தற்கொடை தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

இவ் விடுதலைக்கான பாதைகள் விடுதலைக்கான பயணத்தினால் எதிர் கொள்ளும் சவால்களால் காலத்துக்கு காலம் தீர்மானிக்கப்பட்டவை என்பது தெரியும். அதாவது சாத்வீகமா இல்லை கலகமா என்பது விடுதலைப் போராட்டத்தின்போது போராளிகளாலும் மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது புலப்படும்.

இதே போன்றுதான் தென்ஆபிரிக்காவின் இனப்புறக்கணிப்புக்கான போராட்டமும் சாத்வீக வழியில் போராடி பயனின்றி அவர்கள் ஆயுதம் தூக்கியது. இது பலருக்கு தெரிந்திருந்தும் அவற்றினை ஈழ விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட்டு இன்றைய மற்றும் அன்றைய போராட்ட தன்மை இன்றைய அன்றைய உலகத்தின் போக்கு விடுதலையை விரும்பும் நாடுகள் அவற்றின் உள்நோக்கங்கள் உலகத்தின் போக்கு என்பனவற்றுடன் ஒப்பு நோக்கி பார்ப்பதில்லை.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் தலைவராக வரவேண்டும் எனவும் உலகத்தில் இவ்வாறான மாற்றங்கள் வரவேண்டும் எனவும் ஆசைப்படும் பிரார்த்திக்கும் நாம் எம்மிடத்தில் எம்முடன் வாழ்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என சிந்தித்துப் பார்ப்பதில்லை.அல்லது சிந்திப்பவர்கள் பற்றியும் அவர்களின் எண்ணங்கள் பற்றியும் சிந்தித்து பார்ப்பதில்லை. கறுப்பு தலைவர் ஒருவர் அமெரிக்காவை ஆள வேண்டும் என்று போராடியவர் ஆபிரகாம் லிங்கன் அவர் இவ்வுலகு விட்டகன்று எத்தனை வருடங்களின் பின்னர் மீண்டும் அவரை வெற்றியுடன் கறுப்பர்கள் நினைவு கூர்ந்தார்கள்.உலகமும் நினைவு கூர்ந்தது. இது வெறும் செய்தியாகவோ இல்லை நம்மில் பலருக்கு மயிர் கூச்செறியும் சாதனையாகவோ இருக்கலாம். ஆனால் இவ்வாறான புதியனவற்றை புரட்சிகளை நம்மவர்கள் செய்ய முற்படும் போது முன்னின்று உதவும் மனப்பாங்கு எம்மில் எத்தனை பகுதியினருக்கு உண்டு. இல்லை உதவ வேண்டும் எம்மவர்களும் புரட்சிகள் செய்ய வேண்டும் என்னும் சிந்தனை தானாக எழுபவர்கள் எத்தனைபேர் நம்மில் உண்டு.

வியட்நாமில் அமெரிக்க வல்லரசு தோற்றது என்னும் செய்தியை படித்து பூரிப்படைந்த எம்மில் பலர் அவ்வாறு எம்மில் சிலர் நியாயமான ஒன்றை எட்டிவிட விழைகையில் அது எட்டாக்கனி என்று கூறிவருகின்றோம். ஏன் எம்மில் எமக்கு நம்பிக்கை இல்லையா இல்லை இழப்புகள் வலிகளுக்கு பயமா இல்லை போராடப் பயமா.

தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்று நேற்றல்ல கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டு வந்துள்ளது. கடந்த முப்பது வருடங்களாக அது ஆயதப் போராட்டமாக வீறுகொண்டு நடைபெறுகின்றது. இன்றுவரை அது தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை மக்களின் ஆதரவையும் பறிகொடுக்கவில்லை. இது அண்மைய ஈழ ஆதரவுப் போராட்டங்களின் ஊடாக நீங்கள் கண்டு கொண்டது.

இந்த முப்பது வருடங்களில் அல்லது கடந்த காலங்களில் எமது தாயக உறவுகள் புலம் பெயர் உறவுகளிடம் இன்று கெஞ்சி நிற்பது போல் எப்போதாவது கெஞ்சி நின்றுள்ளார்களா. இல்லை உதவும்படி நேரடியாக கேட்டுள்ளார்களா. இதைசற்று சிந்தித்து பார்க்க வேண்டும்

ஆழிப்பேரலையின் போதும் உருண்டெழுந்து அவர்கள் தம்மை கட்டியெழுப்பத் தயாரானார்கள் நாம் எல்லாம் அதன் பின்னர்தான் உதவினோம். ஆனால் இன்று அவர்கள் கதறுகின்றார்கள். பட்டினியால் இறக்கின்றார்கள். இன்றும் கூட இவர்கள் நீங்கள் தாயகத்துக்கு வாருங்கள் எங்களை காப்பாற்ற என்று கூறவில்லை. இது பற்றி புலம்பெயர் உறவுகள் பலர் பல கருத்துக்களை முன் வைத்து தமது கடைமைகளில் இருந்து தவறி தப்ப பார்க்கின்றார்கள்.அவர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டியது பல உள்ளது. இன்று அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள் என்று சர்வதேசம் வாழ் தமிழ் உறவுகளை கேட்பதற்கு காரணம் என்ன என்பது முதல் கேள்வி.

இதுவரை அவர்கள் சர்வதேசத்திடம் நேரடியாக கேட்காத உதவியை கேட்கின்றார்கள் என்றால் இங்கு தற்போதும் தவறிழைத்தவர்கள் நாங்கள்தான். புலம் பெயர்ந்து சர்வதேசம் எல்லாம் வாழும் நாங்கள் உரியநேரத்தில் உரியதை செய்யாது விட்டதன் பின்விழைவுதான் இன்று தாயகத்தில் எமது மக்களை கொல்லுகின்றது. இன்று தமிழர் தாயகத்தில் நடத்தப்படுவது சிறீலங்கா படையினரது தனித்த யுத்தம் இல்லை என்பது உலகம் தெரிந்த விடயம். உலக அரங்கில் பேரரசுகள் வல்லரசுகளுடன் எமது போராட்டம் முட்டி மோதி நிற்கின்றது. இன்று முட்டிமோதும் வரை புலம் பெயர் நாங்கள் அமைதியாய் தாயகத்தில் மக்களும் போராளிகளும் தமது உயிர்களை தியாகம் செய்து தரும் வெற்றிச் செய்திகளை மட்டும் பெறுவதிலும் அவற்றிற்கு விமர்சனம் செய்வதிலும் மாத்திரம் நின்றிருந்தோம். இவ் வெற்றிகளுக்கு எமது பங்கென்ன என்று சிந்திக்காது செய்த ஒரு சில உதவிகளை எண்ணி புளகாங்காகிதம் அடைந்து அமைதியாகி விட்டோம்.

எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை உலகறியச் செய்யும் போராட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தவறியது சிறீலங்கா அரசுக்கும், சிறீலங்கா அரசுக்கு முண்டு கொடுக்கும் வெளிச் சக்திகளுக்கும் ஊக்கமருந்தளித்துள்ளது. இனியும் ஊக்கமளிக்கும். ஆக மொத்தத்தில் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு நகர்கையில் நாம் விழிப்படைய வீதியில் இறங்க தவறியமை இன்று எமது இனத்தினை சூழ்ந்து நிறிகின்றது. இன்று நாம் மேற்கொள்ளும் போராடடங்களின் அடைவுகள் நீங்கள் நேரடியாக உணர்ந்துள்ள ஒன்று காலம் தாழ்த்திய இவ் போராட்டங்களில் இவ்வளவு தாக்கங்கள் ஏற்படுகையில் காலத்துடன் கூடிய போராடடங்கள் எவ்வளவு சிறந்தது என்பது புரியும்.

இன்றும் எம்மில் பலர் குறிப்பாக மாற்றுக் கருத்துள்ளோர் என தம்மை கூறிக் கொள்ளும் பலர் ஈழத்தமிழரின் விடுதலை என்பது எட்டாக்கனியென்றும் அதற்காக வீண் விலை தேவையில்லை என்பதால் தான் தாங்கள் விடுதலைக்கான போராட்டத்திற்கு உதவவில்லை எனக்கூறி வருகின்றதும் வேறு சிலர் மதில் மேல் பூனையாக இருந்தமையும் அண்மைய நாட்களில் புலப்பட்டுள்ளது. அதாவது போராட்டம் வெற்றிகளை தரும் பட்சத்தில் ஆதரவாளியாகவும் இன்று பின்னடைவுகள் வரும் பட்சத்தில் மாற்றுக் கருத்தாளியாகவும் இருப்பவர்கள் இதில் அடங்குவர்.. அதாவது இந்தியாவை அணுகாது இந்தியா அனுசரியாது ஈழதாயகம் விடுதலை அடையாது என்னும் வாதத்தை முன்வைப்பவர்கள் சில விடயங்களின் உண்மைத் தன்மையை மறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தீபெத்தியர்கள் தனிநாடு கேட்டு சுய ஆட்சி கேட்டு போராடும் ஒரு இனக்குழுமம். இவர்கள் சிறீலங்காவைப்போல பல மடங்கு பெரிய தூங்கும் பூதம் என வர்ணிக்கப்படும் சீனாவிடமே தாயகம் கேட்கையில் அவர்களுக்கு இந்தியா புகலிடம் கொடுத்துள்ள நிலையில் ஏன் எமக்கும் எமது போராட்டத்தின் மீது நம்பிக்கை வரக்கூடாது என்பது சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியது.

இந்தியாவிற்கு உள்ளேயே உரிமைகள் மறுக்கப்பட்டு டில்லிவரை ஊர்வலமாக சென்று போராடி வென்றார்களே குஜ்ஜர் இன மக்கள் இவர்களின் மனங்களில் ஏற்பட்ட உரிமைக்கான உணர்வு எங்களுக்கு ஏன் ஏற்படவில்லை. ஏன் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஒரு கிராமத்தில் தொடரும் இந்தியாவின் இனப்பாகுபாட்டு நடவடிக்கையால் அங்கு இரத்த ஆறு ஓடுவது பற்றி சிந்திப்பதில்லை.

அதேபோல் கடந்த வருடம் உலக வரைபடத்தில் புதிய நாடாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள கொசோவா இந்தியாவை விடப் பெரிய வல்லரசு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் சுற்றியிருக்க தனது சுதந்திரத்தினை எட்டவில்லையா. அதுவும் ஆயுதப் போராட்டம் மூலம். கொசோவா விடுதலை படை என்னும் (KLA) அமெரிக்க மற்றும் பல நாடுகளால் 1998 ல் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புத்தான். இன்று அமெரிக்க அதிபராகி ஓய்வு பெற்ற புஸ்ஸின் இறுதிப் பயணம் கொசோவாவில் முடிந்ததும் அங்கு அவர் காவிய நாயகனாக பாராட்டப்பட்டதும் சிந்திக்க வேண்டியது.

அதை விடுத்து வீணாக சொந்த நலனுக்காக கருத்து கூறி விடுதலையை தாமதப் படுத்துபவர்கள் இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இன்று வரை தாயகத்தில் போராடும் போராளி ஒருவனும் நம்பிக்கை இழக்கவில்லை. சிறீலங்கா படையினரிடம் புகலிடமும் கோரவில்லை. இல்லை ஆயுதத்தினை எறிந்து விட்டு புலம் பெயர்ந்து வாழும் எங்களிடமோ இல்லை. எவரிடமோ பாதுக்காப்பு கோரவில்லை.

அவர்களுக்கு நன்கு தெரியும் தாங்கள் சிறீலங்கா படைகள் என்னும் போர்வையில் உலகின் பலநாட்டு படைவளங்களுடன் மோதுகின்றோம் என்று. ஆனால் முடிவு வரை போராட அவர்கள் தயாராகி விட்டார்கள். அதாவது கொண்ட இலட்சியத்தில் இருந்து பின்வாங்க அவர்கள் தயாரில்லை. இதை நாம் உணரவேண்டும் அதாவது உண்மை வீரர்களின் இனத்தின் ஒரு பகுதி என்று நாம் உணரவேண்டும்.

தற்கொடைப் படையாக சென்று தாக்கி இறக்கையிலும் எதிரிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டும் என்னும் இலட்சியத்துடன் இவர்கள் இருப்பது உங்களுக்கு தெரியும். அதை செய்யவும் தொடங்கிவிட்டார்கள்.

தாயக மக்களை பாருங்கள் தினமும் அவர்கள் பிணம் மீது நடக்கின்றார்கள் இறந்த தமது உறவுகளை புதைத்துவிட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள். மாற்றத்திற்காக புலம் பெயர் உறவுகள் எமது போராட்டத்தின் நியாயத்தினை கூறியவுடன் எமது சுதந்திரப் போரை புதுவீறுடன் முன்னெடுக்கும் தலைவருக்கு உதவ காத்திருக்கின்றார்கள். தமது மண்ணைத் தாம் காத்து நிற்க இழப்புகளையும் தாண்டி அவர்கள் காத்திருக்கின்றார்கள்.

சிறீலங்கா படைகளும் சில வெளிச்சக்திகளும் கூறுவது போன்று அவர்கள் போராளிகளால் சிறையடைக்கப் பட்டிருந்தால் சிறீலங்கா படைகளிடம் வந்து சேர்ந்ததாக சிறீலங்கா அரசு கூறும் அத்தனை பேரும் எவ்வாறு வந்துள்ளார்கள்

நீங்கள் நினைப்பது போல் அல்லது சிறீலங்கா அரசு கூறுவது போல் ஆயிரம் ஆயிரமாய் ஒரே நாளில் தப்பி வருகையில் போராளிகள் என்ன கண்மூடியிருந்தார்களா இல்லை. இவ்வாறு ஆயிரமாயிரமாய் மக்கள் போராளிகளுக்கு தெரியாமல் சிறீலங்கா படையினரை நாடி ஓடி வருகையில் அந்த பெரும் களத்துவாரத்தினூடு சிறீலங்கா படையின் பெரும் ஆளணி வளம் கனரக ஆயுத வளம் போராளிகளின் நிர்வாகத்தினுள் ஊடுருவி தாக்க முடியாதா என்னும் கேள்ளி எழுவது இயல்பானது.

இன்னும் ஒன்று இவ்வாறு பெரும் தொகை சாதாரண மக்கள் விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும்போது விடுதலைப்புலிகளால் போர்க்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள சிப்பாய் ஒருவனால் கூட இன்னும் ஏன் தப்பி வர முடியவில்லை. இதற்கான விடைகள் தேடவேண்டியது இல்லை. தானாக கிடைக்கின்றவை. எனவே நியாயத்தினை புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவின் அத்தனை கட்சிகளும் அத்தனை சிங்கள மக்களும் இணைந்து மிகப் பெரும் போருக்கு ஆதரவு வழங்கி நிற்கின்றார்கள்.

சிறிலங்கா அரசு தனது யுத்த இழப்புக்களை மறைத்தும் சரிந்து செல்லும் பொருளாதார நிலையை வெளிக்காட்டாதும் தமிழரின் பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை படம் பிடித்துக் காட்டியும் பொரும் எடுப்பினாலான பிரசாரங்கள் மூலமாகவும் சிங்கள மக்களுக்கு யுத்த வெறிiயு ஊட்டி வைத்துள்ளது. இன்றுவரை சிங்கள மக்கள் கேட்கவில்லை சிங்கள் சிப்பாய்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை என்ன என்று.

அவர்களுக்கும் தெரியும் யுத்தத்தில் நிச்சயம் இறப்பு வரும் இழப்பு வரும் என்று என்று ஆனால் அவர்கள் சிறீலங்கா அரசுக்கு ஆதரவு தரும் பொருட்டே இவ்வாறு மௌனமாக இருக்கின்றார்கள். இது சிறீலங்கா அரசே ஒப்புக் கொண்டுள்ள விடயம். ஏன் நாங்களும் எமது போராட்டத்திற்கு இவ்வாறு ஒருமித்த ஆதரவு வழங்கக்கூடாது

இன்னும் ஒரு முக்கியமான விடயம் தாயகத்தில் இருந்த இன்றுவரை அதாவது மிகப் பெரும் மனித அவலத்தின் மத்தியில் இருக்கும் மக்கள் அல்லது உலக படைகளின் மிகப் பெரும் நெருக்குதலில் உள்ள போராளிகள் சரி போராட புலம் பெயர் உறவுகள் நேரடியாக வாருங்கள் என்று அழைக்கவில்லை. மாறாக நாங்கள் போராடுகின்றோம் மறைக்கப்பட்டு அழிக்கப்படும் எமது இன அழிப்புப் பற்றியும் எமது போராட்டத்தின் தேவை நியாயத் தன்மை பற்றியும் உலகத்துக்கு புரிய வைக்கும் படிதானே கோரி நிற்கின்றார்கள்.

இன்றுவரை அவர்கள் கூறுவது என்ன போராடி நாங்கள் எமது இலட்சியத்தினை அடையும்போது எமது சுதந்திரம் எம்மை எட்டும்போது எம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம் ஆனால் எட்டப்பட்ட இலட்சியத்தினை அனுபவிக்க சுதந்திரத்தினை சுவாசிக்க புலம்பெயர் உறவுகள் நீங்கள் வருவீர்கள் வர வேண்டும் என்றுதான் கூறி வருகின்றார்கள்

இவ்வாறு தமது நலன் கருதாது போராடி வீழும் அவர்களுக்கு நாம் செய்யப்போகும் கைமாறு என்ன? என பலர் சிந்திப்பதில்லை. நாம் செய்கின்ற ஒரு சில உதவிகளை நாமே பெரிது படுத்தி கூறிக்கொண்டு கேள்விகள் கேட்க விளைவதுதான் இன்று எம்மில் பலரிடம் எஞ்சியுள்ளது.

நாம் எமது மண்ணுக்காக கொடுத்தது என்ன? மண்ணில் உள்ள எமது உறவுகள் மண்ணுக்காக கொடுத்துக் கொண்டுள்ளது என்ன? என நாம் சிந்திக்க வேண்டும்.இன்றைய தேவைகள் கருதி நாமும் களத்தில் இறங்க வேண்டும். உதவிகளுக்கு அப்பால் எமது போராட்டத்தின் நியாயத்தினை உரத்து சொல்ல வேண்டும். இன்று நாளை என்று நாள் குறித்து அல்ல. இந்த இடம் அந்த இடம் என்று இடம் தெரிந்து அல்ல. எங்கும் எப்போதும் எமது போராட்ட நியாயத்தினை கூற வேண்டும்.

ஏற்கனவே நாம் பிந்திவிட்டோம். எனவே இனியும் தாமதிக்காது நாம் செயலில் இறங்க வேண்டும். இல்லை எமது பாட்டன், பூட்டன் வாழந்து இறந்த மண் கண்முன் கற்பழிக்கப்படுவதை பார்த்து இறக்க வேண்டியவர்களாக நாம் நம்மையே மாற்றிக் கொண்டவர்கள் ஆக மாறுவோம்.

எமக்காக என்றிருந்த எமது தாய்நிலத்தினை தாரைவார்த்து கொடுக்கும் மிகப் பெரும் துரோகத்தினை செய்தவர்களாக நாம் மாறுவோம். இயலாது என்று சிந்தித்து நமது சொந்த முடிவுகளுடன் ஒதுங்குவதை விடுத்து முயற்சிக்கு கை கொடுப்போம். மாற்றங்கள் எமக்கு தேவை. இது அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளது. அவ் மாற்றத்துக்காக அழைக்காத அவ்மாற்றத்தை அடைய முடியாது என்று நாம் எவ்வாறு முடிவெடுப்பது.

இதுவரை போராடியவர்கள் இக்கட்டு நிலையிலும் போராடுவோம் என சூளுரைத்து நிற்கின்றார்கள். இதுவரை உதவிகள் மட்டும் செய்த நாங்கள் எவ்வாறு ஒதுங்குவது? தொடர்ந்தும் உதவிகள் செய்வோம். போராட்ட நியாயத்தினை உலகறியச் செய்யும் போராட்டங்களை மேற்கொண்டவாறு.

இந்த நேரத்தில் தமிழர்களாகிய நாம் உச்சரிக்க வேண்டிய எட்வின் சி. பிளிஸின் முது மொழி ஒன்று உள்ளது. அதுதான் வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வி இன்மை அல்ல.வெற்றி என்பது இறுதி இலக்கினை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது முழுமையாக ஒவ்வொரு சமரையும் அல்ல.

annai

நன்றி
ரகசியா சுகி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.