24வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்

ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

பரிஸ் நகரில் இருந்து 468 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 92 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 897 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்றும் சிலர் இணைந்து நடப்பதுடன், ஏனைய பலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர்.

இன்று மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருவதாலும், சிறிய வீதிகள் ஊடாக சிவந்தன் நடந்து செல்வதாலும், பலர் இணைந்து நடக்க முடியாது ஒரு சிலர் மட்டுமே இணைந்து நடந்து செல்ல ஏனையவர்கள் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.