சிறுவர்களையும் அவர்களின் தாய்மாரையும் விரைவாக விடுதலை செய்யும் பணியை கனடிய தமிழர் பேரவை மேற்கொள்கின்றது

இலங்கையிருந்து, தழிழ் அகதிகளை ஏற்றிவந்த ‘சண்சீ’ கப்பல் கனடாவின் பிறிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் கடற்கரையை நான்கு தினங்களுக்கு முன் வந்தடைந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் கனேடிய சட்டத்திற்கு அமைய, தமிழ் அகதிகள் தமது அடையாளத்தை நீருபிக்கும் நோக்கோடு, தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

கனடாவிற்கு அகதிக்கோரிக்கை கேட்டு வந்தவர்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளடங்குவர். தற்சமயம் கனடிய தமிழர் பேரவை இவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி, கனடாவில் அகதிநிலை கோருவோரின் உரிமைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களை வழங்கியுள்ளது. அத்தோடு, குறிப்பாக சிறுவர்களையும் அவர்களின் தாய்மாரையும் விரைவாக விடுதலை செய்யும் பொருட்டு அதற்கான பணிகளை மேற்கொள்வதில் கனடிய தமிழர் பேரவை அயராது உழைத்து வருகின்றது.

புதிதாக வந்தவர்களால், கனேடிய அரசாங்கம் பொதுமக்கள் ஊடகங்கள் மற்றும் கனடிய தமிழர் பேரவை போன்றவற்றிற்கு எழுதி அனுப்பட்ட இரண்டு கடிதங்கள் இன்றைய தினம் கனேடிய தேசியப்பத்திரிகைகளில் ஒன்றான நைசினல் போஸ்றில் வெளியிடப்பட்டுள்ளது. கடிதங்களின் விபரங்களை கீழே பார்வையிடலாம்.

(கடிதம் – 1)

‘நாங்கள், இலங்கையில் ஏற்பட்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து கனடாவிற்கு தப்பி வந்து, அடைக்கலம் கோரி நிற்கும் நியாயமான அகதிகள். கனேடிய அரசாங்கம் மற்றும் பொது மக்களை எம்மீது நம்பிக்கை வைக்கும் படி கேட்கிறோம். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. அத்தோடு இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்போம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.’

(கடிதம் -2)

‘நாங்கள் இலங்கையில் ஏற்பட்ட கொடிய போரில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துள்ளோம். அங்கு அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சுகாதார வசதிகள் போன்றவை பூரணமாக பெறமுடியாத நிலையில் பெரிதும் அல்லல்பட்டுள்ளோம். தற்சமயம் எமது உயிரைப்பாதுகாப்;பதற்காக நான்கு மாதங்களாக ஆழ்கடலில் பல இடையூறுகள் மத்தியில் நிச்சயமற்ற ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இலங்கையில் இப்போதும் நடந்தேறிக்கொண்டு இருக்கும் கொலைகள், கடத்தல்கள், பயங்கரவாதச் செயல்களில் இருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும், பாதுகாத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்தோடு கனடா மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.

காலகாலமாக குடியுரிமை மற்றும் அகதி நிலை கோரி வந்தோரை கனடா அதன் இருகரம் நீட்டி அரவணைத்துள்ளது. அதே போல் கனடாவில் அகதிநிலை கோரி நிற்கும் எம்மையும் கனடா ஏற்றுக்கொள்ளும் என நம்புகின்றோம். கனேடிய சட்டதிட்டங்களுக்கேற்ப நாம் செயற்படுவோம் என நாம் முழு மனதோடு உறுதி கூறுகின்றோம்.’

கனடிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், கனேடிய சமூகத்தில் இருந்துவரும் பல கேள்விகளுக்கு தம்மாலான பதில்களை வழங்கிவருகின்றார்கள். உதாரணமாக கனடா வாழ் தமிழர்களின் உறவினர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்கள் ‘சண்சீ’ கப்பல் மூலம் கனடாவிற்கு வந்தடைந்துள்ளார்களா? மற்றும் கனடா வாழ் தமிழர்கள் எந்த வழிகளில் இந்த விடயத்தில் உதவ முடியும் போன்றவற்றை குறிப்பிடலாம். கனடிய தமிழர் பேரவை ‘சண்சீ’ கப்பலில் வந்திருப்பவர்களை கனடா வாழும் அவர்களின் உறவுகளோடு தொடர்பு படுத்தும் முயற்சியாக கப்பலில் வந்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றது. இத்தோடு கனடா வாழ் தமிழ்க் குடும்பங்களோடு தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள், பற்றியும் மற்றும் சட்டரீதியான விளக்கங்களையும் வழங்கிவருகின்றது.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் குளோபல் அன் மெயில் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கனேடிய தமிழர்கள் சண்சீ கப்பல் மூலம் வந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மேற்குறிப்பிட்ட கருத்துக்கள், கனடிய தமிழர் சமூகத்தின் மேலுள்ள கனடாவின் பார்வையை பாதிக்கலாம் என்ற ஐயத்தை கனடிய தமிழர் பேரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.