பேச்சுவார்த்தைகளை நீடித்து புலிகளைப் பலவீனப்படுத்துவதே எமது திட்டமாக இருந்தது- பேர்னாட் குணதிலக சாட்சியம்

புலிகளுடன் முரண்படக்கூடாதென்று தீர்மானித்திருந்தோம். பேச்சுவார்த்தைகளை நீண்ட காலத்திற்கு இழுத்து அதன்மூலம் அவர்களின் இராணுவக் கட்டுமானத்தை பலவீனமாக்க முடியுமென்பதால் அவர்களுடன் முரண்படாமலிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் விடுதலைப்புலிகள் பிளவுபடுவதற்கும் யுத்த நிறுத்தம் சிறப்பாகப் பயன்பட்டது.

புலிகளை விடுமுறையில் சென்று தமது பெற்றோரையும் உறவினர்களையும் சந்திக்க அனுமதித்தமை, அவர்கள் பெண் சிநேகிதிகள், ஆண் சிநேகிதர்களை வைத்திருப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் அனுமதிப்பதன் மூலம் அவர்களுடைய வலுவான அத்திவாரம் பலவீனமடைந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டோர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தனர், மரணங்களை எதிர்நோக்கினர். எனினும் விடுதலைப்புலிகள் பிளவுபடுவதற்கும் பலவீனமடைவதற்கும் யுத்த நிறுத்தம் சிறப்பாகவே பயன்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு நேற்று கொழும்பிலுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றபோது முதலாவதாக சாட்சியமளித்த, முன்னாள் சிறிலங்காவின் சமாதான செயலகத் தலைவரான பேர்னாட் குணதிலக, போர்நிறுத்த உடன்பாடு தொடர்பான சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்கும்போது இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நோர்வேயின் அக்கறை
2002 ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கும் இடையில் கையெழுத்தான சமாதான உடன்பாட்டை நிறைவேற்றுவதில் நோர்வேஜிய அரசு அவசரம் காட்டியது. சிறிலங்காவின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்ளாது, இந்த உடன்பாட்டை விரைவாக நிறைவேற்றுவதில் நோர்வே தூதுக்குழுவினர் அக்கறை கொண்டிருந்தனர். இது தொடர்பாக அவர்கள் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். மேலும் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்வதையும் குறைக்கும்படி அவர்கள் அரசைக் கேட்டிருந்தனர். மொத்தத்தில் எமது அக்கறைகளுக்கு செவி சாய்க்காது, இது போன்ற பிரச்சனைகள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதிலேயே அவர்களது அக்கறை இருந்தது.

நோர்வே அரசு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலமாக இருப்பதை ஏற்றுக் கொண்டிருந்ததுடன் பேச்சுவார்த்தை மேசையில் விடுதலைப் புலிகளை அரசுக்கு இணையான பங்கினராகவே ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஒப்பந்தம் ஏற்பட்ட சூழல்
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவை தீவிரமாக நியாயப்படுத்திப் பேசிய திரு குணதிலக, இப் ஒப்பந்தம் கையெழுத்தான காலத்தில் இருந்த சூழலை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தில் என்னதான் குறைகள் இருந்தாலும், ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டமை (எப்ரல் 2000) அனிகீல இராணுவ நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வி (ஏப்ரல் 2001), கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் (யூலை 2001) போன்ற சம்பவங்களின் பின்னணியில் அரசுக்கு வேறு வழிகளிருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 இல் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையானது நன்மையானதா அன்றி தீமையானதா என்று என்னால் கூற முடியாது. ஆனால், அந்தத் தருணத்தில் இந்த விடயம் தேவையானதொன்றாகவே இருந்தது.

அன்ரன் பாலசிங்கத்தின் ஆலோசனை
லண்டனிலிருந்த அன்ரன் பாலசிங்கத்தின் ஆலோசனையுடன் நோர்வேயால் யுத்த நிறுத்த உடன்படிக்கை தயாரிக்கப்பட்டதா என்பது பற்றி ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வாவின் கேள்விக்கு பதிலளித்து குணதிலக `அது உண்மைதான்` என குறிப்பிட்டார். அந்த ஆவணம் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் கள நிலமைகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு அது சிறப்பான பயனைத்தரும் என அரசு கருதியது.

பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை நாங்கள் ஆராயும்போது முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு விடுதலைப்புலிகளின் தரப்பு ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. வட,கிழக்கில் மக்களின் நாளாந்த நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு மட்டுமே எமக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அரசியல் விடயங்கள் குறித்து பாலசிங்கத்துடன் பேச்சுகளை மேற்கொள்ள நாங்கள் முயன்றபோது `நீங்கள் என்னை மிகவும் நெருக்கடியான நிலைக்குக் கொண்டு செல்கிறீர்கள்` என்று பாலசிங்கம் கூறினார். நான் இதனைப்பற்றி பேசினால் எனது கழுத்து போய்விடும் என்பதுபோல கழுத்தில் கையை வைத்து அவர் வெட்டிக் காட்டுவார். அன்னர் பாலசிங்கம் தனது கழுத்து வெட்டப்படாமல் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள முயற்சித்தார் என்றும் குணதிலக குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் திட்டம்
யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள புலிகள் விரும்பியதாகவே தென்பட்டது. அதாவது செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தன்மை காணப்பட்டது. அதிலிருந்தும் அவர்கள் காலத்தைக் கடத்த விரும்பினார்கள். அதேசமயம், அச்சமயம் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சமாதானத்தின் மூலம் புலிகளைப் பலவீனமடையச் செய்வதற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டதாக பேர்னாட் குணதிலக தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் முதல் நாளிலேயே யுத்த நிறுத்தத்தை மீறியிருந்தார்கள். அரசாங்கத்தரப்பிலும் பார்க்க அதிகளவு யுத்த நிறுத்தத்தை மீறியிருந்தனர். இலங்கைக் கண்காணிப்புக்குழு இவை தொடர்பாக பரிசீலிக்கவில்லை. விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு விரும்பியிருந்தார்கள் என்பது தெளிவானதாகும். திருகோணமலையில் தடையை ஏற்படுத்தி யாழ்ப்பாணத்தை மீள கைப்பற்றுவதற்கு விரும்பியிருந்தனர்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள். பதிலாக தந்திரோபாயமான முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தனர். அவரை அவர்கள் கடும்போக்காளரென நினைத்திருந்தனர் என்றும் பேர்னாட் குணதிலக குறிப்பிட்டிருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியவாறு புலிகள் சார்புக் குழுக்கள் சில புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து தொடர்ந்தும் நிதி சேகரித்து வருகின்றன. கடந்தாண்டு மே மாதம் யுத்தத்தின்போது கொல்லப்பட்ட பிரபாகரனின் கையெழுத்துடனான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தக் குழுக்கள் இந்நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன எனவும் பேர்னாட் குணதிலக தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

நேற்றைய ஆணைக்குழு அமர்வானது சி.ஆர்.டி.சில்வா தலைமையில் மனோ இராமநாதன், சி.சண்முகம், எச்.எம்.பியஸ், பளிகக்கார, ரொஹான் பெரேரா, ஹரு கங்காவத்த, எம்.பி.பரணகம ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. அமெரிக்க, கனேடிய மற்றும் யப்பான் நாட்டுப் பிரதிநிதிகள் இவ் விசாரணைகளில் சமூகம் அளித்திருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.