வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்ற அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் முன்னர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதன் பின்னர் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடம் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால், மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முயற்சிகளுக்கு இந்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மக்களை வெளியேற்ற வேண்டும் என இந்தியா தற்போது விரும்புகின்றது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்தே வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு அனைத்துலகத்தின் படையினரை பயன்படுத்துவதில்லை என்ற அறிவித்தலை சிறிலங்கா அரசு விருப்பமின்றி தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.