சுவிற்சர்லாந்திற்குள் காலடி வைத்துள்ள சிவந்தனின் மனிதநேய நடை பயணம்

தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 26வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று காலை சுவிற்சர்லாந்தின் எல்லைக்குள் காலடி வைத்திருக்கின்றார்.

சுவிஸ் எல்லையை அண்டிய La Cure என்ற இடத்தில் இருந்து இன்று காலை தனது நடை பயணத்தைத் தொடர்ந்த சிவந்தன், சுவிஸ் எல்லைக்குள் நுழைந்து ஜெனீவா நோக்கி நடந்து வருகின்றார். அவர் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 44 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

நேற்று 9 மணித்தியாலங்களில் 20 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தனுடன் இன்று சுவிற்சர்லாந்தில் இருந்து சென்ற இருவர் உட்பட 12 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.