கௌதம புத்தரின் பெயரால் கொழும்பில் இருவருக்கு கடூழியச்சிறைத்தண்டனை

ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள நீதிமன்றமொன்று மிகவித்தியாசமானதும், பலபொதுமக்கள் புரிந்திருக்காத விடயங்களின் புரிதலின் ஆரம்பதிற்கான ஒரு முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி அரசாங்க ஆதரவுடன் பொதுமக்கள்மீது தொடுக்கப்படும் கலாச்சார அழிவுகளையும், அடாவடித்தனங்களையும் களைவதற்கான நல்ல ஒருசூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதை சமூக ஆர்வலர்களும் மக்கள்பிரதிநிதிகளும் அகமகிழ்ந்திருப்பார்கள் என எடுத்துக்கொள்ள முடியும்.

“சாக்கிய முனி” என்றழைக்கப்பட்ட சித்தார்த்த கௌதமர், என்னும்  கௌதம புத்தர்புத்தர், என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம்  என்றோ கூறிக்கொண்டதில்லை. இருந்தும் உலகின் பலபாகங்களிலும் கௌதமபுத்தரை பின்பற்றிய பெருவாரியான மக்கள்கூட்டம் புத்தரை தேவனாகவும் கடவுளாகவும் போற்றி வழிபட்டு வருகின்றனர். இலங்கையிலும் பெரும்பான்மையாக வாழும் சிங்களமக்களில் அதிகமானோர் புத்தரை பின்பற்றுபவர்களாகவே காணலாம்.

சிலதினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் புத்தரின் உருவப்படம் பொறித்த திறப்புக் கோர்வையை விற்பனைசெய்தார்கள் என்ற குற்றத்திற்காக இருவருக்கு புத்த சமயத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் கொழும்பு தலைமை நீதிபதி “றஷ்மிக்கா சிங்கப்புலி” ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடுழியச் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

இது பாரபட்சமில்லாமல் சகல சமூகத்திற்கும் பொருந்தி தொடருமாகவிருந்தால் தமிழர்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமையும். கடந்தகால படிப்பினைகள் அவநம்பிக்கை கொண்டவையாக விருந்தாலும் உலகத்தின் புரிதலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நிச்சியம் இந்தத்தீர்ப்பு அமையும்.

கொழும்பைச் சேர்ந்த, துவான் றஜாப்தீன், மற்றும் அபூபக்கர் கலீல், ஆகியோரே இவ்வாறு தண்டனைக்குள்ளானோர் ஆவார். கொழும்பு முதலாம் குறுக்குத் தெருவில் புத்தரின் உருவப்படம் பொறித்த திறப்புக் கோர்வையை விற்பனை செய்தனர் என புறக்கோட்டை காவற்துறையினரால் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தண்டனைச்சட்டம் 290 வது பிரிவின் கீழ் புத்த சமயத்தையும் புத்த சமயத்தவர்களின் மன உணர்வையும் திட்டமிட்டுக் காயப்படுத்தும் வகையில் குற்றமிழைத்தனர் என காவற்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிபதி முன்னிலையில் தமது குற்றத்தை ஓப்புக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் நீதிபதி ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடுழியச் சிறைத்தண்டனை வழங்கினார்.

இந்த நீதிமன்றத்தீர்ப்பின் மூலம், புத்தபெருமான் எவ்வளவு பெருமைக்குரியவர் என்பதும், இலங்கையின் நீதித்துறை  புத்தபெருமான் மீதும் மற்றய ஒவ்வொரு மதங்களின் மீதும் எவ்வளவு மதிப்பை கொண்டுள்ளதென்பதும், நீதிமன்ற தீர்ப்பின்மூலம் சகலதரப்பினருக்கும் அறியத்தரப்பட்டிருக்கிறது.

அத்துடன் புத்தரின்பெயரால் அல்லது புத்தரின் அடையாளங்களைப்பாவித்து துஸ்பிரயோகங்கள் இடம்பெறக்கூடாதென்ற உயரிய நோக்கத்தை ஸ்ரீலங்காவின் நீதித்துறை கொண்டிருப்பதையும் இந்தத்தீர்ப்பு வெளிப்படுத்தியிருப்பதையும் காணலாம்.

ஜனநாயகத்தை பின்பற்றும் ஒருநாட்டில் நீதித்துறைதான் உச்சக்கட்டமான ஒழுங்கை வரையறைசெய்யும்   தாபனமாகும். நீதிமன்றத்தை மீறி நடப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதுதான் ஜனநாயகத்தின் பண்பாகும். இதைத்தான் உலகிலுள்ள அனைத்து ஜனநாயகநாடுகளும் பின்பற்றிவருகின்றன.

கொழும்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி றஸ்மிக்கா சிங்கப்புலி அவர்களின் தீர்ப்பின் பிரகாரம் எழுந்தமானமாக இலங்கையில் புத்தர் சிலைகள் புத்தரின் உருவப்படங்கள் கையாளப்படுவது உடனடியாகத்தடுக்கப்பட்டிருக்கிறது. அவை மிகமோசமான குற்றம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எல்லோருக்கும் இவை பொருந்துமென்றே கொள்ளவேண்டும்.

இத்தீர்ப்பின்மூலம் தமிழர்பிரதேசங்களில் விதைக்கப்படும் (தயவுசெய்து மன்னிக்கவேண்டும்) நிறுவப்படும் புத்தர் சிலைகளை நிறுவியவர்கள் எந்த அடிப்படையில் சிலைகளை நிறுவுகின்றனர் என்பதையும், புத்தர் சிலைகளை பயன்படுத்திய விதமும் விசாரணைக்குட்டடுத்துவதற்கான களம் ஒன்றின்  நியாயம் நீதிமன்றத்தின்பால் ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும்பான்மையான சிங்கள மக்களின் வழிபாட்டுக்குரிய மகான் புத்தர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கிடையாது. அதேவேளை   சிறுபான்மையினரான தமிழர்கள்மீது சிங்களமக்கள் தமது துவேசத்தை கக்குவதற்காக புத்தர் சிலைகளைக்கையாளுவதை ஒருவிதமான தந்திரமாகக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நீதிமன்றங்கள் கவனத்தில்க்கொள்ளுமென எதிர்பார்க்கின்றனர்.

அந்தத் தந்திரத்தின் மறைவில் புத்தபெருமானின் மதிப்பின்பால் பலப்பரீட்சை செய்யப்பட்டு அவை துர்ப்பிரயோகமாகி  வருகிறது. அந்த அடிப்படையில் 2002ம் ஆண்டு திருகோணமலையில் முற்றுமுழுதான தமிழர்வாழும் பிரதேசத்தில் பாடசாலை மற்றும் இந்துக்கோவில்களுக்கு மத்தியில் இராணுவத்தினரின் காவலுடன்அரசாங்கத்திலுள்ள ஒருசிலரால் நிருமாணித்துத்தொடங்கப்பட்ட புத்தர் சிலை நாட்டும் ஆரம்பம், 2009 யுத்தம் முடிவடைந்தபின் புத்தரைப்பற்றி அறியாத பௌத்தசடங்குகளை தெரிந்திருக்காத இந்துக்களான தமிழர்கள் வாழும் பகுதிகளில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, என்று பரவலாக புத்தர்சிலைகள் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்படுகின்றன.

இதன் உள்நோக்கம் சிங்களவர்கள் தமிழர்களை துவேசித்து துன்புறுத்துவதற்காகவும், தமிழர்களுக்கென்று இலங்கையில் சொந்த இடமில்லை என்று மறைமுகமாக காட்டுவதற்காகவும் செய்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மையாக இருந்தாலும்,

எந்தச்சம்பிரதாயத்தையும் கடைப்பிடிக்காமல் தமிழர்களை பழிவாங்குகிறோம் என்ற போர்வையில் புத்தபெருமான் மிகமோசமாக இழிவுசெய்யப்படுகிறார் என்பதுதான் உண்மையாகும்.

மாங்குளத்திலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பலநூறு ஆண்டுகள் சிங்களவர்களின் கால்கூடப்படாத பலடங்களில் இன்று அனாதரவாக தன்னந்தனியாக புத்தர்சிலைகள் கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.

ஒரு தேவஸ்தானத்தை நிறுவவேண்டுமென்றால் ஆகக்குறைந்த சமய சம்பிரதாய விதிகளையேனும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பது பலமதங்களின் விதி.

பலதரப்பட்ட மக்கள் வாழும் கொழும்பில் வயிற்றுப்பிழைப்புக்காக புத்தரின் படம்பொறிக்கப்பட்ட திறப்புக்கோர்வையை பின் விளைவையறியாமல் விற்பனை செய்த, துவான் றஜாப்தீன், மற்றும் அபூபக்கர் கலீல், ஆகிய முஸ்லீம் மதத்தைச்சேர்ந்த இருவருக்கும் ஒருவருட கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிகுக்கிறதென்றால் திட்டமிட்டு இன்னுமொரு மதத்தின் மக்களின்மீது தேவையில்லாத கலாச்சார சீர்கேட்டை தோற்றிவிக்கக்கூடிய வகையில் புத்தர் சிலைகளை நிறுவியவர்களுக்கு நிச்சியம் சரியான தண்டனையை நீதிமன்றங்கள் வழங்குமென நம்பமுடியும்.

இன்று கொழும்பு நீதிமன்றம் துவான் றஜாப்தீன் மற்றும் அபூபக்கர் கலீல் ஆகியோருக்கு வழங்கிய தண்டனையை மேற்கோள் கொண்டு வடக்குக்கிழக்கில் வாழும் மக்களின் மனதைப்புண்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன், திட்டமிட்டு புத்தர் சிலைகளை நிறுவி புத்தரின் புனிதத்தை
அவமானப்படுத்தியதுமல்லாமல் இன்னுமொரு சமூகத்தை இக்கட்டான ஒரு நிலைக்குத்தள்ளிய சமூகக்குளப்படிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும். 1ம் குறுக்குத்தெருவில் திறப்புக்கோர்வை விற்பனையில் ஈடுபட்டவர்களை பொலிசாரே பிடித்து நீதியின்முன் நிறுத்தியிருக்கின்றனர்.

தமிழர் பிரதேசங்களில் நிறுவப்பட்டிருக்கும் புத்தபெருமானின் சிலைகள்மூலம் புத்தபெருமானே தமிழர்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தின் மூலம்   முடிவுரை எழுதுவதற்காக உருவாக்கிய எதிர்மறையாகவும்  இந்தத்தீர்ப்பு இருக்கலாம். உருவாகியிருக்கும் எழுவாயை செயற்படுபொருளாக்கவேண்டியது எமது கடமையாகும்.

கனகதரன்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.