இலங்கை அரசின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்களின் காட்டுமிராண்டித்தனம் மலேசியாவிலும்…

மலேசிய மற்றும் இன்ரபோலின் அடையாள அட்டைகளை காட்டி ஈழத்தமிழர்களை விரட்டி, கடத்தி பணம் கறக்கும் சிறிலங்கா புலனாய்வு குழு, சிங்கள கைக்கூலிகள் ஆகியோரின் நடவடிக்கைகள் அண்மையில் அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் வாழும் இலங்கையர்கள் மீண்டும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ள சூழ்நிலைக்கு மலேசியாவில் உள்ள ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களே காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

பல்வேறு காரணங்களுக்காக ஈழத்தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும், வியாபாரம், கல்வி, சுற்றுலா போன்ற காரணங்களுக்காகவும் மலேசியாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கொழும்பு மற்றும் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை,களவு, மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற செயற்பாடுகளில் கைதேர்ந்தவர்களான இவ்வொட்டுக்குழு உறுப்பினர்கள் மலேசியாவில் இருக்கக் கூடிய மற்றும் பல தரப்பினருடன் இணைந்து தொடச்சியாக தமது வன்முறைச்செயற்பாடுகளை அரங்கேற்றி வருகிறார்கள். அத்துடன் மக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளில் சிலர் இவர்களுக்கு உடந்தையாக இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இவர்கள் ஈழத்தமிழர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தகவல்களையும் மற்றும் தொழில் செயற்பாடுகளையும் அறிந்தவர்களாக சந்தர்ப்பம் பார்த்து குறிப்பிட்ட ஈழத்தமிழர்களை கடத்தி அவர்களது உறவினர்கள் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொலை அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் பெருந்தொகையான பணத்தினை பெற்றுக் கொள்கின்றார்கள் மட்டுமல்லாமல் அந்நபர்களை அடித்து துன்புறுத்தியும் உடல் உட்பகுதிகள், வெளிப்பகுதிகள் கடுமையான காயத்திற்கு உள்ளாகும் நிலையினையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தொகை கிடைக்காதவிடத்து அவர்களை கொலை செய்வதற்கும் துணிந்தவர்களாக தமது செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்றார்கள். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் பெரும் நெருக்கடிகளை ஈழத்தமிழர்கள் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களோ இல்லையோ மலேசியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் செயற்படவேண்டும்.

அண்மையில் இந்த குழு மலேசிய மற்றும் இன்ரபோல் ஆகியோரின் அடையாள அட்டைகளை காண்பித்து ஈழத்தமிழர் ஒருவரை விசாரணைக்கென கூட்டிச்சென்றனர். பின்னர் ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு பல இலட்சம் ரூபா கேட்டு மிரட்டினர் . கடத்தப்பட்ட நபர் மறுக்கவே அவரை நான்கு பேரும் மாறி மாறி தாக்கினர், கெட்ட வார்த்தைகளால் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது குடும்பவிபரங்கள் அவர்கள் எங்கே ஈழத்தில் இருக்கின்றார்கள் என்ற விபரங்களையும் தெளிவாக கூறியபின்னர் பணம் தராவிட்டால் ஈழத்தில் இருக்கும் குடும்ப உறவினர்களை கடத்தி கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் இறுதியில் இவரது உறவினர்கள் கொழும்பில் கேட்கப்பட்ட தொகையினை கூறியதும் விடுதலை செய்தனர்.

இங்கு உண்மையாகவே மலேசிய பொலிஸ் மற்றும் இன்ரபோலில் பணி புரியும் மலேசிய பொலிசார் இந்த கடத்தல் நாடகங்களுடன் நேரடியாக சம்பந்தபப்ட்டுள்ளார்களா? அல்லது இவர்களின் பேரை சிறிலங்கா உளவு அமைப்பும் ஒட்டுக்குழு கருணா அவர்களின் அடியாட்க\ள் பாவிக்கின்றனரா என்பது தெரியவில்லை. ஆனால் குறித்த பொலிசார்களின் அடையாள அட்டையினை காட்டியே கடத்தப்பட்டார் என்பது மட்டும் உண்மை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.