மூன்று பீரங்கிகள் கரும்புலிகளால் தகர்ப்பு: ‘லக்பிம’

artillery-explosion-vanniமுல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் உள்ள படையினரின் பீரங்கி தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகள் மூன்று பீரங்கிகளை தகர்த்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘லக்பிம’ ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

55 ஆவது படையணி மற்றும் 58 ஆவது படையணிகளின் இணைப்பு புள்ளியான சாலைப் பகுதிக்கு தெற்குப் புறமுள்ள பகுதி மீது இந்த மாதம் 5 ஆம் நாள் விடுதலைப் புலிகள் ஊடறுப்பு தாக்குதலினை நடத்தினர்.

ஏறத்தாழ 400 விடுதலைப் புலிகள் படையினரின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை கைப்பற்றி தாக்குதலை நடத்தினர். தாக்குதலின் உக்கிரம் காரணமாக இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்ட் படையணிகளும் அங்கு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பெருமெடுப்பிலான இத்தாக்குதலை முறியடிக்கும் பதில் நடவடிக்கைகளை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பொறுப்பெடுத்தார்.

தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்தும் நோக்கத்துடன் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சாலை பகுதிக்கு அனுப்பப்பட்டதுடன் இரண்டாவது சிறப்பு படை அணிகளும் அங்கு நகர்த்தப்பட்டன.

இதேவேளையில் ஊடறுப்பு தாக்குதல் நடத்தப்பட்ட வாரத்தின் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமோண்டோ அணி ஒன்று விசுவமடுவில் உள்ள பீரங்கி தளத்தின் மீது தாக்குதலை நடத்தியது.

இதில் மூன்று 122 மி.மீ பீரங்கிகளை கரும்புலிகள் அழித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.