அந்த ராணுவ வீரர்கள் விரும்பினால் எந்த தமிழ்ப் பெண்ணையும் கற்பழிக்கலாமாம் – எம்.எஸ்.நாகராஜன்

போரில் மனிதர்கள் வீழ்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கே மரங்களே வீழ்ந்து கிடக்கின்றன.காடு என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கே காட்டுக்கு பதில் கட்டாந்தரைதான் தென்படுகிறது” என்று சொல்கிறார் எம்.எஸ்.நாகராஜன். உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோருக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளின் மேலாளர்.சமீபத்தில் இலங்கை சென்று தமிழீழப் பகுதிகளை பார்வையிட்டு வந்திருக்கிறார்.

“கண்டியிலிருந்து வவுனியா பகுதிக்குச் செல்ல நாலரை மணி நேரம் ஆகிறது. இடையில் இரண்டு ராணுவ முகாம்கள். சிங்கள ராணுவ வீரர்கள் நம்மை கடுமையாக சோதிக்கிறார்கள்.அதன் பின்னே புலிகள் அரசாண்ட பகுதிக்கு அனுமதிக்கிறார்கள்.

வவுனியாவுக்குள் நுழைந்தால் நிறைய வீடுகள் இருக்கின்றன. ஆனால் எதிலும் மனிதர்கள் இல்லை.

வவுனியாவிலிருந்து இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது கிளிநொச்சி. இங்கும் இதே நிலைதான். மக்களையே பார்க்க இயலவில்லை.எல்லோரும் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. சொந்த நாட்டிலே சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாய் இருக்கிறார்கள்’’ என்கிறார் நாகராஜ்.

”இங்குள்ள அகதிகள் முகாமிற்குச் சென்று பார்வையிட ராணுவத்தினரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். சாதாரணமானவர்கள் போய் பார்வையிட முடியாது. இந்த நகரங்களைச் சுற்றி ஏராளமான விளைநிலங்கள் இருக்கின்றன. ஆனால் எதிலும் விவசாயம் நடைபெறவில்லை. காரணம் அந்த விளைநிலங்களில் கண்ணிவெடிகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றனவாம். அதனால் மக்கள் அந்த நிலங்களில் நடக்கவே பயப்படுகிறார்கள்.கண்ணிவெடிகளை நீக்க ராணுவம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அங்கிருந்து ஏ9 சாலை மார்க்கமாய் ஓமந்தை, புளியன் குளம் வழியாகச் சென்றால் யாழ்ப்பாண நகரம் வருகிறது. இங்கு கொஞ்சம் மக்களைப் பார்க்க முடிகிறது. இந்த மக்களின் நிலை பரிதாபகரமாய் இருக்கிறது. கன்னம் ஒட்டி, உடல் மெலிந்து, வயிறு காய்ந்து, பேசவே பயந்து வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் மிடுக்காய் செல்வ செழிப்பாய் வாழ்ந்த தமிழ் மக்கள்.அவர்களைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது. நாம் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம் என்றதும் அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. நம் விசாரிப்புகளுக்கு தலையசைப்பு மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. சிலர் கொஞ்சம் தைரியமாகப் பேசுகிறார்கள். ஆனால் நாட்டைப் பற்றியோ, ராணுவத்தைப் பற்றியோ அல்ல, வெறும் நலம் விசாரிப்புகள் மட்டும்.

அங்கே ஒரு குடும்பத்தினரிடம் பேசினேன்.அந்தக் குடும்பத்தில் தந்தைக்கு ஒரு கால் கிடையாது.தாய்க்கு இரண்டு கால்களும் கிடையாது. அதோடு கை விரல்களும் இல்லை. சமீபத்திய போரில் இவர்களுக்கு ஏற்பட்ட கொடூர இழப்புகள் இவை.இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன்.அந்த மகனை கவனிக்க முடியாமல் அவர்கள் படும்பாடு வார்த்தைகளால் சொல்ல முடியாது. ‘நாங்க வீட்டுக்குள்ள இருந்தபோது பீரங்கிக் குண்டு வந்து பக்கத்து மைதானத்தில் விழுந்தது. அந்த அதிர்வில் எங்கள் வீடு சிதைந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பைக் எங்கள் வீட்டுக்குள் விழுந்து எங்களை சின்னாபின்னமாக்கியது.குண்டு எங்கள் வீட்டின் மீது விழுந்திருந்தால் ஒரேயடியாக போய்ச் சேர்ந்திருப்போம். இப்படி அரைகுறை உடலோடு சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்க மாட்டோம்’ என்று அழுதுகொண்டே சொல்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். இது போன்று பல குடும்பங்கள். ஒரு தலைமுறை தமிழர்களே சிதறடிக்கப்பட்டு விட்டார்கள்.

அங்கே ஒரு தமிழர் என் காதில் கிசுகிசுத்த தகவலைக் கேட்டு அதிர்ந்து போனேன். தமிழர் பகுதிகளிலெல்லாம் இளம் சிங்கள ராணுவ வீரர்களை தங்க வைக்கிறார்களாம். அந்த ராணுவ வீரர்கள் விரும்பினால் எந்த தமிழ்ப் பெண்ணையும் கற்பழிக்கலாமாம். எந்த நேரமும் தமிழ்ப் பெண்ணுக்கு ஆபத்துதானாம்.யாரும் தடுக்க முடியாதாம். என்ன கொடுமை இது.

யாழ்ப்பாணத்துக்கு சில கிலோ மீட்டர் முன்னால் புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயில் இருக்கிறது.தமிழர்கள் வணங்கி வந்த கோயிலுக்கு இப்பொழுது சிங்களர்கள் அதிகம் வந்து வழிபடுகிறார்களாம். முன்பு இந்தக் கோயிலுக்கு அவர்களால் வர இயலாமல் இருந்தது. இப்போது தமிழர்கள் தயங்கித் தயங்கித்தான் அந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். கடவுளை வணங்குகிறார்கள்.

உலக மக்கள் கைவிட்ட நிலையில் தமிழர்கள் அந்தக் கடவுளை வணங்குவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று நாகராஜன் தனது ஈழ அனுவங்களை முடித்தபோது நம் கண்களிலும் கண்ணீர்..

நன்றி குமுதம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.