பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது.

ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ்ப்பாணம் செல்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற உரிய அலுவலகத்துக்குச்சென்றனர். ஆனால்அந்நடைமுறை நீக்கப்பட்டு விட்டது என அங்கு தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை வந்து அடைந்த அவர்கள் வடமராட்சி- கற்கோவளத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றுக்கு சென்று தங்கி இருந்தனர்.

இவர்களை மோப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டினர். கடவுச்சீட்டைத் தரக் கோரினர். மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக்களையும் பறித்தெடுத்தனர்.

தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றனர்.தொலைபேசியில் மதியம் தொடர்பு கொண்டபோது ஐவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்களுக்குள் 50 இலட்சம் தந்து விட்டு கடவுச் சீட்டைப் பெறக் கோரினர்.தவறினால் கொல்லப்படுவர் என்றும் மிரட்டினர்.அவர்கள் கொடுத்த தவணை நேற்றுடன் முடிந்து விட்டது.

இந்நிலையில் இக்குடும்பத்தினர் கற்கோவளம் பொலிஸ் நிலையத்தில் கப்பம் கோரல், கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கினர்.பின் ஏற்றனர். குடும்பத் தலைவர் அத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மிரட்டல் பேர்வழிகளுடன் பேசினார்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றமை தெரியும் என்றும் முறைப்பாட்டை வாபஸ் பெற்று விட்டு வந்து விட வேண்டும் என்றும் பணத்தைத் தரா விட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்டல் பேர்வழி ஒருவர் கூறி இருக்கின்றார்.

பொலிஸார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர் மரண அவஸ்தையில் அந்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.