இலங்கை வரும் நிருபமா ராவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்

நான்கு நாள் பயணமாக வருகிற 30 ஆம் தேதி இலங்கை வரும் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள், விமான மற்றும் துறைமுக அபிவிருத்தி ஆகியவற்றில் இந்தியாவின் பங்கீட்டினை இலங்கையில் ஆராய்வதற்காகவே நிருபமா ராவ் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவரது நிகழ்ச்சி நிரல் எவ்வாறு அமைந்துள்ளது என்பது தெரியாது.

எனினும் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகிய நடவடிக்கைகளை நிருபமா ராவ் பார்வையிடுவதானது தமிழ் மக்களுடன் தொடர்புபட்டது என்பதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காக அவரை சந்திக்க வேண்டியுள்ளது என்று அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட எம்.பிக்கள் சிலர் நாட்டில் இல்லையென்று தெரிவித்த அவர், இந்திய வெளியுறவுச் செயலர் 30 ஆம் தேதியே வரவிருப்பதாலும் அவர் மீண்டும் இந்தியா செல்வதற்கு மேலும் மூன்று தினங்கள் செல்லும் என்பதாலும், கூட்டமைப்பு அவரை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.