அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள ரணில் விக்ரமசிங்க வழியமைத்தார் – ஜே.வி.பி.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழியமைத்தார் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்புக்களின் போது ரணில் விக்ரமசிங்க முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவில்லை என ஜே.வி.பி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கிரக நிலை மாற்றங்கள் மற்றும் ஜோதிட விடயங்கள் குறித்தே ரணில் விக்ரமசிங்க கூடுதலாக பேசியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இதன் காரணமாக ஜனாதிபதி மூன்றாது தடவையாகவும் ஆட்சி வகிக்கக் கூடிய வகையிலான ஓர் அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தி ஆளும் கட்சிக்கு உறுப்பினர்களை திரட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவரின் பலவீனங்களினால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி பாராளுமன்றில் உத்தேச அரசியல் சாசனத் திட்டம் சமர்ப்பிக்கப்படலாம் எனவும், இதன் மூலம் நாட்டு மக்களுக்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ எவ்வித நன்மையும் கிட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
1977ம் ஆண்டு பின்னர் ஆட்சி நடத்திய எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அளவிற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.