புலிகளின் கப்பல் பொறியியலாளருக்கு நியூசிலாந்தில் புகலிடம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் பொறியியலாளர் எனக் கருதப்படும் ஒருவருக்கு புகலிடம் வழங்கப்பட வேண்டும் என நியூசிலாந்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய கப்பல் ஒன்றின் பொறியிலாளராக இவர் கடமையாற்றி இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2001ஆம் ஆண்டு இவர் நியூசிலாந்தில் புகலிடம் கோரியிருந்த போது அக் கோரிக்கை அந் நாட்டு அரசங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவர் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த நியூசிலாந்து உயர்நீதிமன்றம், இவருக்கு புகலிடம் வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

அதேவேளை, விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார் எனக் கூறி பார்வையற்ற சிறிசெல்வன் ஜூட் என்பவரைக் கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒழுங்கு முறையான விசாரணைகள் இன்றி பார்வையற்ற இவரை  விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் என சிறிலங்காப் பொலிஸார் எவ்வாறு கைது செய்யமுடியும் என பிரதம நீதிபதி அசோக டீ சில்வா நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியயுள்ளார்.

அத்துடன், இந் நபரை பிணையில் விடுதலை செய்வதற்கான சாதக நிலையை உடனடியாக அறிவிக்குமாறு சிறிலங்காப் பொலிஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.