அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் செப்டெம்பரில் சமர்ப்பிப்பு!

இரு தடவைகள் ஜனாதிபதி பதவியில் இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிடக் கூடியவாறான ஏற்பாடுகளுடைய அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பாராளுமன்ற அமர்வின்போது சபைக்கு சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் அனுமதியின் பொருட்டு இந்த அரசியலமைப்புத் திருத்தம் செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குணவர்தன கூறினார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசிலமைப்பு திருத்தம் பற்றிய சட்டமூலமானது அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும்.முன்னர் இவ்வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்பிக்கப்படும் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அதை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பி வைப்பார்.உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்ததன் பின்னர் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், தற்போது எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பாராளுமன்றத்தில் இருக்கிறது.எதிர்க்கட்சியிலிருந்த எம்.பி.க்கள் எம் பக்கம் இணைந்துள்ளனர்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே எமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் இருந்து மேலும் எதிரணி எம்.பி.க்கள் எமக்கு ஆதரவை வெளியிடுவார்கள் என நம்புகிறோம்.

எனவே, அரசாங்கத்துக்கு இந்த அரசிலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியுமென எதிர்பார்க்கிறோம்.

இதேநேரம், செப்டெம்பர் முதலாம் திகதி அல்லது இரண்டாம் திகதி அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது அந்த வாரத்தில் ஒரு நாளில் அரசாங்கத்தின் முக்கிய விடயமாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இந்த அரசியலமைப்பு திருத்தம் பற்றிய சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றார்.

அரசியலமைப்பு திருத்தத்தின் உள்ளடக்கம் பற்றி வினவியபோது பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன;ஆவது அரசியலமைப்பு திருத்த அமுலாக்கத்தை துரிதப்படுத்தும் வகையிலான விடயங்களும் ஜனாதிபதியின் பதவிக்காலம் பற்றிய விடயங்களுமே இந்த திருத்தத்தின் மூலம் முக்கிய அம்சங்களாக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ஏற்கனவே இரு தடவைகள் அப்பதவிக்கு தெரிவாகிவிட்ட நிலையில் அவர் மீண்டுமொரு தேர்தலை சந்திக்க நேர்ந்தால் அதில் போட்டியிடக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய திருத்தமும் இதில் அடங்குகிறது என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.