வடமராட்சி கிழக்கில் மக்களை மீளக்குடியமர விடாது முரண்டுபிடிக்கிறது படைத்தரப்பு

வடமராட்சி கிழக்கு குடாரப்பிலிருந்து சுண்டிக் குளம் வரையான பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்த முடியாது எனத் சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் மீள்குடி யேற்றம் தொடர்பாக பலாலி படைத் தலைமை யகத்தில் நேற்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

யாழ்.குடாநாட்டின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கத்துருசிங்க மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், பிரதேச செயலர்கள் மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலர்களும் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தக்கலந்துரையாடலில், வடமராட்சி கிழக்குப் பகுதியின் மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, வடமராட்சி கிழக்கு குடாரப்பிலிருந்து சுண்டிக்குளம் வரையான பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்க முடியாது எனத் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்தது.

தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தை அடுத்து,

வடமராட்சி கிழக்கு மாமுனையிலிருந்து ஆழியவளை வரையான ஒரு சில பகுதிகளில் மட்டுமே மக்களை மீளக்குடியமர்த்த அனுமதிக்க முடியும் என்று படைத்தரப்பினர் தெரிவித்தனர்.

மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான இறுதி தீர்மானங்களை யாழ். மாவட்ட படைத் தளபதியும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து மேற்கொள்வார்கள் எனவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.