’சண் சீ’ கப்பலில் கனடா வந்த அகதிகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள்

’சண் சீ’ கப்பல் மூலம் கனடாவிற்கு வந்துள்ள குடிவரவாளர்களுள் குறிப்பிட்ட இரண்டு பெண்களின் புகலிட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

கனடாவில் தற்போது தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட இரண்டு பெண் குடிவரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என அண்மையில் பிரிட்டிஸ் கொலாம்பியாவினைச் சென்றடைந்த சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழ் சட்டவிரோத குடிவரவாளர்கள் மத்தியிலுள்ள சில பெண்கணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஒருவர் கூறுகிறார்.

இவர்களில் ஒருவர் குண்டுச் சிதறலினால் காயமடைந்திருக்கிறார் என்றும் மற்றைய பெண் சித்திரவதைக்கு உட்பட்டிருக்கிறார் என்றும் அவர் கூறுகிறார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின்போது ஏற்பட்ட காயத்தினால் ஒரு பெண் அவதியுற்று வருவதாக கடந்த வெள்ளியன்று வன்கூவரில் இடம்பெற்ற அகதிகளுக்கான முதலாவது அமர்வின் போது அகதிகளாக வந்திருக்கும் நான்கு பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துணை கவுண்சிலர் மாலினி டைனோசியஸ் கூறுகிறார்.

குறிப்பிட்ட இந்தப் பெண் எப்போது காயமடைந்தார் மற்றும் எதனால் இந்தக் காயம் ஏற்பட்டது என்பன தெளிவாகத் தெரியாத போதும் இவரது காலின் மத்தியிலுள்ள குண்டுச்சிதறலினால் இந்தப் பெண் நோய்த் தொற்றுக்குள்ளாகும் அபாயம் எழுந்திருப்பதாக மாலினி கூறுகிறார்.

குறிப்பிட்ட இந்தப் பெண் தனது காயத்திற்கு மருத்துவம் செய்யும் நோக்கில் சிறிலங்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றிருந்தபோதும் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற காரணத்தினால் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கிறார் என மாலினி தொடர்ந்து தெரிவித்தார்.

தொற்று நீக்கிகள் மற்றும் வலிநீக்க மாத்திரைகள் என்பவற்றை குறிப்பிட்ட இந்தப் பெண் பெற்றிருக்கின்ற போதும் கனடாவிற்கு வந்தது முதல் காயத்தினால் ஏற்பட்ட வேதனை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்.

இதேவேளை,தடுப்பிலுள்ளவர்கள் மத்தியிலுள்ள இன்னொரு பெண்ணின் அகதி அந்தஸ்தினைக் கோரும் வேண்டுகையும் வேகப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறார் மாலினி.

குறிப்பிட்ட இந்தப் பெண்ணின் கணவன் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக மாலினி கூறுகிறார்.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் போதிய மருத்துவ சிகிச்சையினைப் பெறாதிருக்கும் இந்தப் பெண் சிறிலங்காவில் இருந்தபோது சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும் இவரது மார்பில் சிக்கரேட்டினால் சுட்ட தழும்புகள் இருப்பதாகவும் மாலினி தொடர்ந்து தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்தப் பெண்ணின் கணவன் எப்போது சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றும் இவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டது எப்போது என்ற விடயங்கள் இதுவரை தெரியவரவில்லை.

குறிப்பிட்ட இந்தப் பெண்களின் அகதி அந்தஸ்துக் கோரிக்கை தொடர்பான வேண்டுகையினை விரைவுபடுத்துவதாக கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பணியக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

முன்னுரிமை வழங்கப்பட்ட இந்தப் பெண்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதோடு அவர்களுக்கான நேர்காணல்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர்களது கைவிரல் அடையாளங்கள் இன்னமும் பெறப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பணியகம் ஆகியவற்றைப் பிரநிதிநித்துவப்படுத்தும் றொன் யமுச்சி என்ற வழக்கறிஞர் கூறுகிறார்.

குறிப்பிட்ட இந்தக் குடிவரவாளர்களின் அடையாளத்தினை அறியும் முனைப்புக்களில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறுகிறார். வங்கிப் பதிவுகள், பாடசாலை வாழ்க்கை, தொழில் புரிந்த இடங்கள் மற்றும் அவர்களது உடல்நலம் தொடர்பான விபரங்களையே அதிகாரிகள் பெற்று வருகிறார்கள்.

சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழ் குடிவரவாளர்களை ஏற்றிய படகு கனடாவிற்குள் வந்து இரண்டு வாரங்களே ஆகிறது.

அத்துடன் 492போர் குறிப்பிட்ட கப்பலில் வருகை தந்தைமையினால் அவர்களது சிறிலங்காவினது தேசிய அடையாள அட்டை, பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவது விளங்கிக்கொள்ளக்கூடியதே.

செப்ரெம்பார் மாத நடுப்பகுதி வரைக்கும் இந்த நான்கு பெண்களும் தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருக்கப்படவேண்டும் என்றும் பின்னர் இவர்களது வழக்கும் மீண்டும் விசாரணைக்கான எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் மீதான விசாரணைகளை நடத்திவரும் நீதிபதி கூறினார்.

’எம்.வி சண் சீ’ என்ற கப்பல் மூலம் கனடாவிற்கு வந்த 492 தமிழ் அகதிகளை அடையாளம் காணும் பணி இன்னமும் நிறைவுக்கு வராதமையினால் இவர்களில் எவரும் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.