பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை

இலங்கையில் இடம்பெற்று வந்த பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் மாரவில பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட ஐந்து பேரைக் கைது செய்ததன் மூலம் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகம் இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் நோக்கில் மாரவில ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளுக்குச் செல்வதற்காக நபர் ஒருவரிடம் தலா 12 லட்ச ரூபா அறவீடு செய்யப்படுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
 
குறித்த நபர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்துள்ளார்.
 
நீர்கொழும்பு, கிழக்கு மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளில் இந்த சட்டவிரோத ஆட்கடத்தும் கும்பல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
படகுகளின் மூலம் நபர்களை வெளிநாடுகளுக்கு இந்தக் கும்பல் அழைத்துச் சென்றுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.