மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா பதவி: “ஐ.நாவுக்கு சவால் விடுகின்ற இலங்கை அரசு”………?

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராகப் பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த நியமனமானது இரண்டு விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 1. இலங்கையின் வெளிநாட்டு இராஜதந்திர சேவையில் முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகளின் கை ஓங்கி வருகின்றது என்பது முதலாவது விடயம்.
 2. இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ள நிலையில் இந்தப் போரில் முக்கிய பங்கு வகித்த ஒருவரையே ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளது என்பது இரண்டாவது விடயம்.

இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக இராணுவ அதிகாரிகளை அதிகளவில் வெளிநாட்டு இராஜதந்திரிகளாக நியமித்து வருகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகளை இலங்கை அரசு வெளிநாட்டுத் தூதுவர்களாக அனுப்பும் வழக்கம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.

இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு ஓய்வுபெற்றதும் 1959ம் ஆண்டிலேயே பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, எகிப்து போன்ற நாடுகளிலும் தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.

இதற்குப் பிறகு,

 • ஜெனரல் சேபால ஆட்டிக்கல பிரித்தானியாவுக்கும்,ஜெனரல் டெனிஸ் பேரேரா அவுஸ்ரேதலியாவுக்கும்,ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க கனடாவுக்கும், ஜெனரல் சிறில் ரணதுங்க அவுஸ்ரேலியா மற்றும் பிரித்தானியாவுக்கும், ஜெனரல் ஜெரி டி சில்வா பாகிஸ்தானுக்கும், ஜெனரல் றொகான் தளுவத்தை பிறேசிலுக்கும், ஜெனரல் சிறிலால் வீரசூரிய பாகிஸ்தானுக்கும், ஜெனரல் சாந்த கொட்டேகொட பிறேசிலுக்கும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.
 • தாய்லாந்துக்கான தூதுவராக லெப். ஜெனரல் சிசில் வைத்தியரத்னவும், ஈராக்கிற்கான தூதுவராக மேஜர் ஜெனரல் றிச்சர்ட் உடுகமவும் , இந்தோனேசியா மற்றும் அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவும், இந்தோனேசியாவுக்கான தூதுவராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சியும் நியமிக்கபடடனர்.
 • கடற்படையைச் சேர்ந்த அட்மிரல் பெரேரா கென்யாவுக்கும், வைஸ் அட்மிரல் சில்வா கியூபாவுக்கும் , விமானப்படையைச் சேரந்த எயர் சீப் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானுக்கும், எயர் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இஸ்ரேலுக்கும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களை அனைவரும் இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.

இராணுவ சேவையில் இருக்கும் அதிகாரிகளுக்கு வெளிநாட்டுத் தூதரகங்களில் இராஜதந்திரப் பதவிகளை வழங்கும் நடைமுறை ஒன்றை இலங்கை அரசு அண்மையில் தான் அறிமுகப்படுத்தியது.

பொதுவாக வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் எல்லா நாடுகளுமே பாதுகாப்பு ஆலோசகர் என்ற வகையில் தமது நாட்டுப் படை அதிகாரி ஒருவரை நியமிக்க முடியும்.

Defence attache என்று அழைக்கப்படும் இந்தப் பதவிக்கு படை அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது இராஜதந்திரிகளாகவே இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

 • முன்னர் தாய்லாந்து தூதுவராக இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவும், பிரிதானியத் தூதரகத்தில் வெளிநாட்டுப் புலனாய்வுச் சேவை பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சூல செனிவிரத்னவும் இராணுவ சேவையில் இருந்து கொண்டே பணியாற்றியிருந்தனர்.
 • நான்காவது கட்ட ஈழப்போருக்குப் பிறகு மலேசியாவுக்கான தூதுவராக மேஜர் ஜெனரல் உதய பெரேராவை அரசாங்கம் அனுப்பியது. ஜேர்மனிக்கான துணைத் தூதுவராக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டார்.
 • எரித்திரியாவுக்கான தூதுவராக இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு தூதரகம் திறப்பதற்கு அனுமதி கிடைக்காததால் அவர் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.

இப்போது அரசாங்கம் ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை அனுப்பப் போகிறது.

அதேவேளை பிரித்தானியாவுக்கான தூதுவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை நியமிக்கவுள்ளதுடன், பிரித்தானியாவிலுள்ள தூதரகத்தல் பணியாற்றுவதற்கு மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவையும் அனுப்பவுள்ளது.

இதைவிட மலேசியத் தூதுவராக ஜெனரல் அனுருத்த ரத்வத்தையை நியமிக்கும் எண்ணமும் அரசுக்கு இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.

ஐ.நாவுக்கான பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படலாம் என்ற தகவலும் உள்ளது.

இப்போது வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அல்லது நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ள படை அதிகாரிகள் அனைவருமே புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப்போரில் முக்கிய பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

மேஜர் ஜெரலல் உதய பெரேரா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா என்று இராணுவ சேவையில் இருந்து கொண்டே வெளிநாட்டு இராஜதந்திரிகளாகப் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை நீளப் போவது உறுதியாகியுள்ளது.

இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகள் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தான் இப்படியான நடைமுறையைப் பின்பற்றும்.

இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் சிவில் அதிகாரிகளை அவ்வளவாக நம்புவதில்லை. அதனால் முக்கிய பொறுப்புகள் இராணுவ அதிகாரிகளிடமே வழங்கப்படும்.

இஸ்ரேலில் நிலைமை கொஞ்சம் வித்தியாசம்.

அங்கு கட்டாய இராணுவ சேவைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

அனைவருமே இராணுவத்தில் குறிப்பிட்ட காலம் பணியாற்றியிருக்க வேண்டியது அவசியம்.

எனவே அங்கு அரசியலில் இருப்பவரானாலும் சரி இராஜதந்திர சேவைக்கு வருபவரானாலும் சரி இராணுவத்தில்பணியாற்றியவராகவே இருப்பார்.

ஆனால் இலங்கையில் நிலை அப்படியில்லை.

இருந்தபோதிலும் இராணுவ சேவையில் இருக்கும் போதே இராஜதந்திரிகளாக நியமிக்கப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசதுறைகளில் முக்கிய பொறுப்புகளில் முன்னாள்படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இது இராணுவத்தின் கை அரசாங்கத்துக்குள் ஓங்கி வருவதையே காட்டுகிறது.

 • அதேவேளை ஐ.நாவுக்கான தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 • முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இவரது தலைமையிலான 58வது டிவிசனே சண்டையில் முக்கிய பங்காற்றியது.
 • புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை இவரது படைப்பிரிவே சுட்டுக் கொன்றது.

இந்தக் கட்டத்தில் தான் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்திலும் இவரைச் சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளியாகின. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்கோ அளித்த பேட்டி ஒன்றின் பின்னர் இவரது பெயர் இந்த விகாரத்தில் முக்கியமாக அடிபட்டது. ஆனாலும் அதை அரசாங்கமும், இராணுவமும், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் முற்றாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

 • இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா நிபுணர்குழு இந்த விவகாரம் குறித்தும் முக்கியமாக ஆராயவுள்ளது. இந்தநிலையில் மேஜர் ஜெனரல் சவீந்தர சில்வாவுக்கு ஐ.நாவிலேயே பதவியைக் கொடுத்துள்ளது இலங்கை அரசாங்கம். இது ஐ.நாவுக்கு சவால் விடுகின்ற சங்கடத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நகர்வாக இருக்கலாம். வெள்ளைக்கொடி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமாகவும் இதைக் கருதலாம்.

நிபுணர்குழுவை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்க எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கும் ஐநாவுக்கும் இடையில் தோன்றிய முறுகல் நிலை இப்போது தான் கொஞ்சம் தணிந்து கொண்டு வருகிறது.

இந்தக் கட்டத்தில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம் புதிய சர்ச்சை ஒன்றுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை.

– கபில்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.