மஹிந்தவின் அடுத்த ஆட்சிக் காலமும் உறுதிப்படுத்துகிறது!

ஐ.ம.சு.மு. அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிட்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்ததையடுத்தே இப்பலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் மூலம் அரசியலமைப்பு திருத்தத்தை இலகுவாக நிறைவேற்ற அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஐ.ம.சு.மு. 143 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது.

இருப்பினும் அரசியலமைப்பு திருத்தத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில்150 பேரின் ஆதரவு கிடைக்க வேண்டும். இந்தளவில் அரசுக்கு தேவைப்பட்டது 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே ஆகும்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்தமையும், ஐ.தே.க. சின்னத்தில் போட்டியிட்ட பிரபா கணேசன், திகாம்பரம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொண்டமையையும் அடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்தது.

மு.கா. நேற்று முன்தினம் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததையடுத்து மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரின் ஆதரவுடன் அரசின் பலம் 154 நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில், உத்தேச அரசியலமைப்பு திருத்த வரைபு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் முதலாவது வாரத்தில் இந்த அரசியலமை ப்பு திருத்த வரைபு நாடாளுமன்றில் முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜனாதிபதியின் ஆட்சிக் கால எல்லையை நீடித்தல், சுயாதீன ஆணைக் குழுக் களை உருவாக்குதல், 13 வது திருத்தச் சட்டத்திற்கூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குதல் உட்பட முக்கிய விடயங்கள் அரசியலமைப்புத் திருத்தத்தில் சேர்க்கப்படவிருப்பதாகத் தெரிய வருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.